கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மூன்று சர்வதேச அமைப்புகள் மறுத்தமை இலங்கை அரசுக்கு விழுந்த முதலாவது சர்வதேச அடியென்று கூறலாம். யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தும் மேற்படி ஆணைக்குழுவானது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிபகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகள் குழு ஆகிய அமைப்புக்களை சாட்சியமளிக்க அழைத்திருந்தது.
ஆனால் அந்த அழைப்பை மேற்படி சர்வதேச அமைப்புகள் அடியோடு நிராகரித்து விட்டன.இலங்கையில் யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழு மீது எமக்கு நம்பிக்கையில்லை. ஆகையினால் நாங்கள் சாட்சியமளிக்க வரமுடியாது என அந்த அமைப்புகள் கூறியமையினால் இலங்கை அரசு தீட்டிய திட்டம் படுதோல்வியடைந்துள்ளது.
அதாவது வன்னியில் நடந்த யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா.சபை முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில், அந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு இலங்கை அரசு அவசர அவசரமாக ஆணைக்குழுவொன்றை அமைத்தது. பாட்டும் நானே! பாவமும் நானே! என்பதாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவானது விசாரணை நடத்தி நீதி காண்பதென்பதைவிட அந்த ஆணைக்குழுவை அங்கீகாரமுள்ள அமைப்பாக்கி, அதன் விசாரணை முடிபுகளை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளவைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டன.
இத்திட்டத்தின் மூலம் ஐ.நா. சபை யுத்தக் குற்ற விசாரணையை மேற்கொள்வதைத் தடுப்பதே முதன்மை நோக்கமாகும். அரசின் இத்திட் டத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் உடன்பட்டிருந்தார். விசாரணைக்கு அழைத்தால், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க தயார் என இரா.சம்பந்தர் தெரிவித்திருந்தார். அவரின் கருத்து வெளியாகியபோது அது மிகக் பெரும் தவறு, யுத்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு அரசு அமைத்த ஆணைக்குழு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளிக்குமாயின் அதனை தமிழர் தரப்பு அங்கீகரிப்பதாக முடியும். இது ஐ.நா.சபையின் விசாரணைக் குழுவை தூக்கி எறியச் செய்யும் என்று இவ்விடத்தில் பிரஸ்தாபித்திருந்தோம்.
எதை எழுதினாலும் அதைத் தமக்கு விரோதமாகப் பார்க்கும் பரிதாப நிலையில், மூன்று சர்வதேச அமைப்புக்கள், ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மறுத்ததன் மூலம் பிரஸ்தாப ஆணைக் குழுவின் விசாரணைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உறுதியாகி விட்டது.
மிகவும் முதன்மை வாய்ந்த சர்வதேச அமைப்புக்களால் நிராகரிக்கப்பட்ட இலங்கை ஆணைக் குழுவின் விசாரணைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதே தற்போதைய முடிவு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக