பயங்கரவாதத்தை ஒழித்தவரென அரசினாலும் சிங்கள மக்களினாலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட சரத்பொன்சேகாவுக்கு இன்று இந்த நிலைமை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்னவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நீதிபதிகளுக்கான சம்பள அதிகரிப்புத் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது;
நீதிமன்றம் ஓரளவுக்கு சுயாதீனமாக இயங்குகின்றது. எனினும் சுயாதீனமாக இயங்குவதற்கான சூழல், களம் உருவாக்கப்படவில்லை.
வவுனியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டோருக்கு இன்று வரையிலும் பாதுகாப்பு செயலாளராலோ அல்லது வேறு யாராலுமோ தடுத்து வைக்கப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவின்றியே இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் ஒன்றரை வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த மக்கள் தொடர்பில் சட்டம் எங்கே சென்றது? நீதிமன்றம் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்குத் தடைவிதிப்பது கைது செய்யப்படுவதற்கு ஒப்பானதாகும். இந்த மக்களின் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 ஆயிரம் பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்குச் சென்று நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாமல் இல்லை. அதற்காக விண்ணப்பித்தோம். இதற்கான உத்தரவை நீதிமன்றம் ஒரே நாளில் வழங்கியிருக்கலாம். தமிழ் மக்கள் என்று பார்க்காமல் நீதித்துறை இதனைச் செய்திருக்கலாம். ஆனால் இன்று வரையிலும் செய்யவில்லை.
சரத்பொன்சேகா தனிநபரல்ல. அவர் தொடர்பான விடயம் கோட்பாட்டு முக்கியமானதாகும். சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது விட்டிருந்தால் அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.
யுத்த வீரன் என்று அரசாலும் சிங்கள மக்களினாலும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய சரத்பொன்சேகாவுக்கு இன்று இந்நிலைமை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன? தமிழ் மக்களின் தலைவிதி நீதித்துறையின் முன்னிற்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக