பலாலி விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசு மறைமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கை என்ற போர்வையில் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி வட பகுதி மக்கள் கொழும்பு வராமலேயே வெளிநாடுகளுக்குப் பயணிக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கூறிவருகின்ற போதிலும், அரசாங்கம் இந்த விமான நிலையத்தினை இந்தியாவுக்கு விற்பதற்கு மறைமுகமான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அதற்கேற்ற விதத்திலேயே யாழ்ப்பாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உப அலுவலகம் திறக்கப்படுவதாகவும், இந்தியா இதனூடாக அதன் விமான சேவைகளை அங்கிருந்து மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக் காட்டினார்.
எதிர்காலத்தில் விமான நிலையங்கள் மட்டுமன்றி துறைமுகங்கள் கூட வெளிநாடுகளுக்கு விற்கப்படும் நிலை ஏற்படலாமெனவும் அவர் தெரிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கம் படிப்படியாக இலங்கைமீது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக