இந்திய இராணுவத்துடன் போய் ஈழம் அமைப்பேன் புகழ் ஜெயலலிதா..
தமிழ் சாதியை என்ன செய்யப்போகிறாய் புகழ் கலைஞர்…
தமிழகத்தில் அழகிரிக்கும், மு. கருணாநிதிக்கும் எதிராக அ.தி.மு.க மதுரையில் நடாத்திய ஆர்பாட்ட ஊர்வலத்தில் பெருமெண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த ஆர்பாட்டத்தை பெரும்பாலான தமிழப் பத்திரிகைகள் பார்க்காது அடக்கி வாசித்துள்ளன. ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வெற்றி என்ற கோணத்தில் இதை நோக்கவும் தவறியுள்ளன.
இதற்கு உடனடியாக பதிலளிக்கத் தவறிய மு.கருணாநிதி எடுத்து வீசிய துரும்புச் சீட்டு ஈழத் தமிழர்தான். ஈழத்தில் துயர்படும் தமிழ் சாதியை காக்க யார் வருவார் என்று கேட்டு கவலை கலந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா கலைஞர் மீதும், அழகிரி மீதும், கலைஞரின் குடும்ப ஆட்சி மீதும் வைத்த துணிச்சலான குற்றச்சாட்டுக்களுக்கு கலைஞர் கண்டெடுத்த அரிய துருப்புச் சீட்டாக ஈழத்தில் உள்ள தமிழ்ச் சாதியே பயன்பட்டுள்ளது.
இதேபோல சென்ற தடவை இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் இருந்து படை கொண்டு சென்று ஈழத்தை அமைப்பேன் என்று ஜெயலலிதா மார்தட்டி தேர்தலில் குதித்திருந்தார். தேர்தல் முடிந்ததும் அவர் ஈழத் தமிழரை அடியோடு மறந்துவிட்டார்.
தமிழகத் தலைவர்களுக்கு ஈழத் தமிழர்கள் என்பவர்கள் வெறும் துரும்புச் சீட்டுக்கள்தான், மற்றப்படி எதுவும் கிடையாது என்ற கருத்தை என்றுமே ஏற்கமுடியாத இனமாக ஈழத் தமிழர் இருப்பது இரு தலைவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கிறது. கடந்த 30 வருட கால அரசியல் வண்டியை ஓட இப்படித்தான் ஈழத் தமிழர் பகடைக்காய்களாயினர்.
இப்போது போர் முடிவடைந்துவிட்டது, இனியாவது இந்த நிலை மாறுமா என்றால், இன்றும் மாறவில்லை. ஜெயலலிதாவின் ஆர்பாட்டத்தை திசை திருப்ப ஈழத் தமிழ் சாதியை கலைஞர் இழுத்திருப்பது இதற்கு இன்னொரு உதாரணம்.
திரிகையில் உள்ள இரண்டு கற்களும் தேய்படும்போது அதற்குள் அகப்பட்ட உழுந்து உடைந்து நொருங்கும். சரி உழுந்துதான் உடைந்து முடிந்துவிட்டதே இனியென்ன என்று நினைக்கலாம் ஆனால் திரிகைக்கு தொடர்ந்து நெரிப்பதற்கு உழுந்து வேண்டும். போர் போரில்லை என்பதல்ல உடைபட உழுந்து வேண்டும், ஈழத் தமிழனை விட்டால் அதற்கு வேறு யாருண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக