சனி, 30 அக்டோபர், 2010

ஈழத்தமிழர் போராட்டம் தொடரும்: சிறீதரன் எம்.பி

எமது நாட்டில் சிங்கள மக்களைப் போன்று தமிழ் மக்களும் சமவுரிமையும் சுதந்திரமும் பெறும்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக வழிப் போராட்டம் தொடரும் என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர்   சி.சிறீதரன். கிளிநொச்சி செல்வா நகரில் இடம்பெற்ற யூதா முன்பள்ளித் திறப்பு விழாவின் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; சிறுபான்மை மக்கள் என்று எவரும் இந்த நாட்டில் இல்லை என்று சொன்னார்கள். உண்மையில் அது உளப்பூர்வமாக சொல்லப்பட்டதென்றால் மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அதைச் சொன்னவர்களே பின்னர் சிறுபான்மைத் தமிழர்கள் என்று உச்சரித்தார்கள். நாங்கள் சிறுபான்மையினரில்லை. நாம் எமக்கென்றொரு பாரம்பரியம், கலாசார விழுமியங்கள், தனித்துவமான மொழி போன்ற அடையாளங்கள் கொண்ட தேசிய இனம். இதை நாங்கள் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டதாக எல்லோரும் சொன்னார்கள் உண்மையில் நான் கூட சில வேளைகளில் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் இப்போதெல்லாம் எனக்கு அப்படி எந்த உணர்வும் எழுவதில்லை. நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்றால் நாங்கள் எல்லோரும் இறந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமக்கு வாழ்வதற்கான உரிமைகள். நடமாடுவதற்கான உரிமைகள் வேண்டும். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்பது ஏற்புடையதல்ல.

போரும், இழப்புக்களும் எமக்கொன்றும் புதிதல்ல. நிறையவே சந்தித்திருக்கிறோம். அதிலிருந்து இன்றுவரை வாழ்கின்றோம் என்றால் அதற்கு அடிப்படை எங்கள் கல்வியும், நம்பிக்கையும் தான் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக