யாழ்.வசந்தபுரம் மக்கள் அந்த மண்ணில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பதோடு தற்போது மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான சகல உதவிகளையும் மேற்கொள்வோமென தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா கூறியுள்ளார்.
வசந்தபுரம் கிராமத்தில் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்குப் பின்ன மக்கள் தற்போது மீளக்குடியமர்ந்த நிலையில் பல இடர்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் பேசுகையில் 1995 ஆம் ஆண்டு அகதிகளாகப் புறப்பட்டவர்கள் இன்றைக்குச் சொந்த மண்ணில் வாழும் கனவுகளுடன் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர அவர்களைத் துன்பப்படுத்தக் கூடாது. அவ்வாறான செயற்பாடுகளிற்கு நாம் எவரும் துணை போகக்கூடாது.
தொழில் இல்லை. வாழ்வதற்கு ஒரு ஒழுங்கான கூடாரம் கூட இல்லை. மழைக்காலம் தொடங்கி விட்டது. இந்நிலையில் சுமுகமான வாழ்க்கை வாழமுடியாமல் மக்கள் உள்ளனர். இதைவிடச் சுகாதார வசதிகள் முழுமையாகக் கிடையாது. இந்த நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எம்மைச் சந்தித்த போது தமக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர். நிச்சயமாக அதனைச் செய்து கொடுப்போம். மேலும் மாநகரசபை மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த போது அதனை இராணுவம் தடுத்துள்ளது.தடுப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எதிர்வரும் காலத்தில் அந்த மக்களின் தொழில் முயற்சிகளுக்கான உதவிகளைச் செய்வதோடு வசந்தபுரம் மீள்குடியேற்றம் தொடர்பாக யாழ்.அரச அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் பேசுவேன் என்றார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக