வியாழன், 28 அக்டோபர், 2010

ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் உறுதிப்படுத்தும்படி இந்தியப் பிரதமரிடம் மலேசிய இந்திய மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானப் போரில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ஜப்பான் மற்றும் பல நாடுகள்   அளித்த இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைக்கொண்டு இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை கடந்த ஆண்டு மே மாதம் 19 இல் தோற்கடித்ததாக அறிவித்தது.

ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தப் போரில் இலங்கை அரசாங்கம் அதன் சொந்த குடிமக்களான தமிழர்களை அந்நிய நாட்டவர்களின் உதவியோடு கொன்றுக் குவித்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவற்றில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் முள்வேலிக்குப் பின்னால் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் வாழ்ந்தது, வாழ்ந்து கொண்டிருப்பது நரக வாழ்க்கையாகும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் போரில் இந்தியாவுக்கு பெரும் பங்குண்டு. போர் முடிவுற்ற பின்னரும் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளையும் அரசியல் அதிகாரங்களையும் உறுதிப்படுத்தும் பெரும் கடப்பாடு இந்திய அரசுக்கு உண்டு.

இவற்றை வலியுறுத்தி மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் மலேசிய இந்திய மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

128 அரசு சார்பற்ற அமைப்புகள் இக்கோரிக்கையை ஆதரித்துள்ளனர். தமிழர் பேரவை மலேசியாவின் தலைவர் டாக்டர் என். ஐயங்கரன் மற்றும் இதற்கான ஒருங்கிணைப்பாளரும் மனித உரிமை கழகத்தின் (சுவாராம்) தலைவருமான கா.ஆறுமுகம் ஆகியோர் இக்கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இக்கோரிக்கை மனுவுக்கு ஆதரவு தெரிவித்த 128 அமைப்புகளில் ஜெரிட், தமிழ் அறவாரியம், இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி ஆகியவற்றோடு சீனர்களின் பண்பாடு மேம்பாட்டு மையமான எல்எல்ஜி மையமும் (LLG (Lim Lian Geok) Cultural Development Centre) அடங்கும்.

இன்று பிற்பகல் மணி 1.00 அளவில், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு அக்கோரிக்கை மனுவை தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மா. மனோகரன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கினார். இக்கோரிக்கையின் நகல் ஒன்று இந்திய தூதரகத்திடமும் வழங்கப்பட்டது.

இந்தியப் பிரதமரிடம் இன்று வழங்கப்பட்ட கோரிக்கை மனு:

“இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்”

நாங்கள், இவ்விடயத்தில் அக்கறை கொண்ட அமைப்புகள், 27 அக்டோபர் 2010-ல் மலேசியாவிற்கான உங்கள் வருகை திறந்த மனதுடனும் மகிழ்வுடனும் வரவேற்கிறோம். உங்களின் மலேசிய வருகை இரு நாடுகளுக்குமிடையிலான, மக்களிடையிலான நல்லுறவை மேலும் பேணவும் அதிகரிக்கவும் உதவுமென நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வேளையில் நாங்கள் இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்திருக்கும் அவலங்களை ஒட்டி பெருவாரியான மலேசியர்கள் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களுக்குத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். இந்திய அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பாதுகாப்பிற்கும் தமிழர் பகுதியில் மறுவாழ்விற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்.

கடந்த 19 மே 2009-ல் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிரைப் பலிக் கொண்ட விடுதலைப் புலிகளுக்கான எதிரான போரில் தன் வெற்றியை இலங்கை அரசு அறிவித்தது. போரின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்தின் குண்டுகளுக்கு பொதுமக்களில் பலரும் உயிரைத் துறக்க நேர்ந்தது. இலங்கை இராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல்களையும் போர் குற்றங்களையும் இப்போரில் நிகழ்த்திருப்பதைப் பற்றி மனித உரிமை கழகம் கடுமையாக கண்டித்திருக்கிறது.

போர் முடிவுற்று 17 மாதங்கள் கழிந்தும் அனைத்துலக சமுகத்திற்கும் இந்திய அரசிற்கும், தமிழர்களின் மறுவாழ்வு ஒட்டிய நடவடிக்கைகள் நியாயமாகவும் நீதிக்கு உட்பட்டும்  மேற்கொள்ளப்படும் என்ற  வாக்குறுதிகளை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.

இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றாத கோரிக்கைகள்:

அ) போர் முடிவுற்றதும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு இன்னும் அரசியல் பொது மன்னிப்பு வழங்காதிருப்பது.

ஆ) விடுதலை இயக்கத்தில் போராடிய இளைஞர்களை மீண்டும் பொது நீரோடையில் இணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது. கைது செய்யப்பட்ட 11000-க்கும் அதிகமான இளைஞர்களைச் சிறைகளில் வதைப்பதோடு அனைத்துலக சட்டம் அனுமதிக்கும் கைதிகளுக்கான முறையான மருத்துவ சிகிச்சை வசதிகளை கூட ஏற்படுத்தி தராமல் இருக்கிறது.

இ) முடிவுற்ற துயர்மிகுந்த போரின் நேரடி சாட்சிகளான 300,000-க்கும் அதிகமான பொதுமக்களை முகாம் என்ற பெயரில் முள்வேலிகளால் தடுக்கப்பட்ட சிறைகளில் தடுத்து வைத்திருக்கிறது இலங்கை அரசு. அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதுடன் முறையான மறுவாழ்வு திட்டங்களையும் அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஈ) இலங்கையின் வடக்கும் கிழக்குப் பகுதிகளைத் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும்.

உ) தேர்தலில் அச்சுத்தலுக்குள்ளானவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களும் கூட சுதந்திரமாக பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

தமிழர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே பல பகுதிகளுக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நடமாடவும், உணர்வுகளை வெளியிடும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட 100,000-க்கும் அதிகமானவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு கூட இன்னும் தரப்படவில்லை. தனி ஈழம் கோரி போராடியவர்கள் மீதான இராணுவ நடவடிக்கையின்போது இலங்கை அரசு பொறுப்பில்லாமல் பல்வேறு போர் குற்றங்களையும் விஷமமான பொய் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிட்டது.

ஐயா, உங்கள் அரசிற்கு இலங்கை அரசோடு நல்லுறவும் தட்டிக் கேட்கும் திறனும் உள்ளதை நாங்கள் அறிவோம். தமிழ் விடுதலை வீரர்களை ஒடுக்க உங்கள் அரசு நிறைய ஆயுதங்களையும், பண உதவியும், இராணுவ நிபுணத்துவ ஆலோகர்களையும் தந்துதவியதை மறுக்க இயலாது. அதோடு போரினால் பாதிப்புற்று தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த பல இலட்ச தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய உதவிகளை உங்கள் அரசு வழங்கியதையும் நாங்கள் மறக்கவில்லை. உங்கள் அரசு கன்னிவெடிகளை அகற்றவும் சிதைந்த வீடுகளைச் சீர்ப்படுத்தவும் உதவியதையும் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறோம்.

இதன் அடிப்படையில் இலங்கை அரசிடம் உங்களுக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த நீங்கள் முயலவேண்டும்.

இது நடவாத வரை இலங்கையில் பல்லின மக்களுக்கு இடையிலான இணக்கமான சூழல் ஏற்படுவது சிரமம்தான். இதனால் தமிழர்கள் தாங்கள் இரண்டாம் நிலை குடிமக்களாகவும் தோற்கடிப்பட்டவர்களாவும் தொடர்ந்து உணர்வதை தடுக்க இயலாது.

உங்கள் அரசு மறைமுக இராஜதந்திர வழிகளில் இலங்கை அரசை பணிய வைக்க முயல்வதை நாங்கள் அறியவே செய்கிறோம். இத்தகைய இராஜதந்திர வழிகள் சில நேரங்களில், காலங்களில் ஏற்புடையதாக இருந்தாலும் இலங்கை அரசு இத்தகைய நயமான ஆலோசனைகளைத் ஏற்க மறுத்தே வருகிறது. அதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சனையில் இத்தகைய மென்மையான இராஜதந்திர முயற்சிகள் நிச்சயம் பலனளிக்காது.

தென்னாசிய வட்டாரத்தில் முக்கியத்துவமும், ஐ.நா பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர அங்கத்துவம் பெற விருப்பமும் கொண்டிருக்கும் இந்திய அரசு  பல ஆண்டுகளாக பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழ் மக்களின் மீது கொண்டிருக்கும் பொறுப்புணர்வை எவ்வேளையும் தட்டிக் கழிக்கக் கூடாது.

இதன் அடிப்படையில் இந்திய அரசு, ஐ.நாவின் கோரிக்கையான இலங்கை அரசால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டப் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீதும் முறையான விசாரணை அமைவதை உறுதிச் செய்ய வேண்டும்.

பல ஆண்டுகளாக தமிழர்கள் இலங்கை அரசால் எதிர்நோக்கிய இனப் பாகுபாட்டிற்கும் கடுமையான மனித உரிமை மீறலுக்கும் நீதியும் நேர்மையுமான அரசியல் ரீதியிலான தீர்வே முறையான தீர்வாக அமையும்.

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் அதிகார ஏற்றத்தாழ்வினாலும், தமிழர்களை அரசியல், பொருளாதாரம், சமுகவியல், கலாச்சார ரீதியாகவும் ஒடுக்கியதாலும், ஒரு கட்டத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டதும் இந்திய அரசு 80-களில் அவர்களுக்கு உதவியதும் வரலாறு.

இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாம்களிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். தங்கள் இருப்பிடங்கள் முற்றாக அழிந்து விட்டதாலும், உயிர் பாதுகாப்பிற்கு அஞ்சியும் இன்னும் முகாம்களிலேயே தங்கியிருக்கும் துர்பாக்கிய நிலையில் உள்ளனர். போரினால் தமிழர் பகுதிகளில் பல்வேறு உரிமை மீறல்கள் இலங்கை அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உரிமைகளைக் காக்க அவர்களுக்குத் தொடர் பாதுகாப்பும் உதவிகளும் வழங்கப்படவேண்டும். இந்திய அரசு தமிழர்கள் புனர்வாழ்வை உறுதி செய்வதோடு அவரகளின் பாதுகாப்பாக தங்கள் இருப்பிடம் திரும்பவும் உறுதிச் செய்ய வேண்டும் என்பது எங்களின் தாழ்மையான விண்ணப்பம்.

இலங்கை அரசு 10,000 புதிய வசிப்பிடங்களை 60,000 இராணுவ வீரர்களுக்கு தமிழர் பகுதிகளான கிளிநொச்சி, முறிகண்டி, புளியங்குளம்,பொன்னேரி, வன்னி போன்ற சில பகுதிகளில் கட்டமைப்பதில் ஈடுப்பட்டு வருகிறது. இராணுவ வீரர்களின் மற்ற உறவினர்களைக் கொண்டு வரவும் பல புதிய வசிப்பிடங்கள் உருவாக்கும் திட்டங்களையும் கொண்டுள்ளது. முன்பு மறைமுகமாக தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றிய இலங்கை அரசு இப்போது வெளிப்படையாக இந்திய தமிழ்நாடு அரசுகள் முன் நேரடியாகவே அத்தகைய குடியேற்றங்களை அரங்கேற்றுவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தங்கள் பகுதிகளில் அமைதியாக வாழ்ந்து வந்த தமிழர்களை மேலும் கலவரப்படுத்தும் இந்நடவடிக்கையில் இலங்கை அரசு முனைந்துள்ளது. தமிழர் பகுதிகளின் வரலாற்று முகங்களைச் சிதைக்கும் தீய நோக்கம் கொண்ட இலங்கை அரசின் இந்நடவடிக்கையை உடனே நிறுத்த இந்திய அரசு முயல வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இலங்கையின் நடப்பு சூழலை கண்காணிக்க ஒரு அனைத்துல சுதந்திர கண்காணிப்புக் குழுவை அமைக்கும் அனைத்துலக சமுகத்தில் கோரிக்கைக்கு இந்திய அரசு முழுமையான ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம். இதனால் அங்கு நடைபெறும் விடயங்களை ஒட்டிய துல்லியமான உண்மையான தகவல்களை அறியலாம்.

இந்த சுதந்திர கண்காணிப்பு குழுவின் இயக்கம் பாதிப்புற்ற அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி இருப்பதோடு மனித உரிமை மீறல்களை முறையாக விசாரித்து சரியான தரவுகளை அனைத்துலக சமுகத்தின் முன் வைக்கவேண்டும்.

இவற்றோடு சுதந்திரமான பத்திரிக்கையாளர்களும் அனைத்துலக செய்தி நிறுவனங்களும் பாதிப்புற்ற தமிழர்களை எவ்வித தடையுமின்றி அணுகவும் உரையாடவும் அனுமதிக்கப்படும் பட்சத்தில் உண்மையான நிலைமை உலகுக்கு தெரிய வருவதில் தடையில்லாமல் இருக்கும். இலங்கை அரசின் தகவல்களை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது.

இறுதியாக, இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ள அனைத்துல மனித உரிமை கழகத்தின் மசோதாவின் உள்ளடகத்தை தன் செயல்பாட்டில் பேணவும் நடைமுறைப்படுத்தவும் செய்வதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென மீண்டும் விழைகின்றோம்.

இதில் தமிழர்களின் உரிமையை இலங்கை அரசு உறுதி செய்வதால் மட்டுமே தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவும் தன்மானத்தோடும் வாழ முடியும். நீதியுணர்வை முன்னிறுத்திய உண்மையான அமைதியே இதற்கு ஒரே வழி.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக