புதன், 20 அக்டோபர், 2010

தமிழீழ அகதி மீது மலேசியாவில் தாக்குதல்.

இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதியாய் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர் மீது மாற்றுச்செயலணித் தலைவர் என கூறிக்கொள்ளும் கலைவாணர் என்பவரும் அவரது கும்பலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழீழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த கைலைநாதன் த/பெ அரசரத்னம் (வயது28) எனும் இளைஞனே இவ்வாறு தாக்கப்பட்டவராகும். இத் தாக்குதல் தொடர்பாக அவ் இளைஞன் வழங்கிய தகவல்:

“சம்பவத்தின் போது நண்பர் ஒருவரின் வருகைக்காக மெட்ராஸ் காஃபே முன்புறம் காத்துக்கொண்டிருந்தேன். என்னுடன் நான்கு நண்பர்களும் காத்திருந்தனர். அப்போது மெட்ராஸ் காஃபே முன்புறம் மாற்று செயலணிக் கட்சித் தலைவர் எனக்கூறிக்கொண்டு திரியும் கலைவாணரும் அவரின் மகனும் பேசிக்கொண்டிருந்தனர்.  அங்கு நின்று கொண்டிருந்த என்னிடம், எங்கு வேலை செய்கிறாய் என்று கலைவாணர் கேட்டார். அதற்கு நான் வேலை ஏதும் செய்யவில்லை என்று கூறியதும் சாப்பிடுவதற்கு என்ன செய்கிறாய் என்று கலைவாணர் கேட்டார். நண்பர்களின் உதவியில் ஏதோ சமாளித்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தேன்.

அப்பொது கலைவாணருடன் இருந்த அவரின் மகன், “நீ மிகவும் திமிர்த்தனமாக பதிலளிக்கிறாய்” என்று கூறி நான் எதிர்பாராத சமயம் பார்த்து என் கன்னத்தில் அறைந்தார். நான் திமிர்த்தனமாக பதிலளிக்கவில்லை. உண்மையைத்தான் கூறுகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் மகன் மீண்டும் என்னை தாக்க வந்தார். உடனடியாக நானும் என்னுடன் இருந்த நண்பர்களும் அங்கிருந்து தப்பித்துவந்துவிட்டோம்.”

நான் அவர்களிடம் உண்மையைத்தான் சொன்னேன் “உண்மையைச் சொன்னால் அறைவதா?” என்று அவ் ஈழத்து இளைஞன் கேள்வியெழுப்பினான்.

தங்களது நாட்டில் உயிர்வாழ இயலாது என்பதனால்தான் அவர்கள் மலேசியாவுக்கு அகதியாய் வந்தார்கள் ஆனால் இங்கு அந்த உறவுகளுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்க யாருமில்லை என்பது வேதனைக்குறிய விடயமாகும். கலைவாணர் பற்றியும் அவரது செயற்பாடுகள் பற்றியும் பல முறைப்பாடுகள் வெளிவந்துள்ளன. அத்துடன் போலீசிலும் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

ஈழத்துஅகதிகள் மீது  தாக்குதல் தொடுக்கும்  இவர்களா ஈழஅகதிகளுக்கு உதவி செய்கிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக