புதன், 20 அக்டோபர், 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்காக வாய்ப்பு தரவேண்டும் - இந்தியாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது அல்லது விலக்குவது குறித்து தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வில் புலிகளின் தரப்பு நியாயங்களையும் எடுத்து வைக்க வாய்ப்பு தரவேண்டும் என இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினைப் புதுப்பிப்பது தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வானது தவறுகள் கொண்டதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு நீதிசார் நடைமுறையிலும் இருதரப்பினரையும் கேட்கும் வாய்ப்பு என்பது இயல்பான நீதியோடும், நியாயத் தன்மையோடும் இணைந்த அம்சமாகும்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

அத்தோடு எந்தத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும் தமது வாதத்தை முன் வைக்க வரும் பட்சத்தில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படலாம் அல்லது சட்டத்துக்குப் புறம்பான தண்டனையை அனுபவிக்கலாம் என்பது பற்றிய அச்சம் முற்றாகத் தவிர்க்கப்படும் வகையில் இந்திய அரசாங்கம் தம்மால் இயன்ற அத்தனையையும் செய்ய வேண்டுமெனவும் உரத்துக் கூற விரும்புகின்றோம்

தேசங்களின் எல்லைகளைக் கடந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் ஈழத் தமிழ்ச் சமூகத்தினராகிய நாம் எமது சொந்த மண்ணில் நீதியோடிணைந்த விடுதலைக்காக மேற்கொண்டு வரும் போராட்டத்தின் இன்றைய முக்கியமான கட்டத்தில் இந்திய தேசத்திடமிருந்து நீதியையும் நேர்மையினையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்", என்றார் உருத்திரகுமாரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக