புதன், 20 அக்டோபர், 2010

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பிரிட்டன் நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சந்திப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பிரிட்டன் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது இடம்பெயர் மக்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும், மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக இடம்பெயர் மக்கள், மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் சிரத்தை எடுத்துக் கொள்வதாக பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் பிரதேச மக்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கும், பௌத்த சின்னங்களை உருவாக்குவதற்கும், இராணுவ குடியிருப்புகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் போது மக்கள் கொல்லப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் வடக்கு கிழக்கில் 90000 பெண்கள் கணவனை இழந்துள்ளதாக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் உயிரிழக்கவில்லையென்றால் எவ்வாறு இவ்வளவு கணவனை இழந்த பெண்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக கட்சி முறைப்பாடு செய்துள்ளது.

வெளிநாடுகளில் அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்ட போதிலும், இலங்கையில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தம்மை அணைத்துக்கொள்ளாமல் அரசாங்கம் செயற்படுவது தொடர்பிலும் பிரித்தானிய நாடாளுமன்ற குழுவினருக்கு எடுத்து கூறப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பான தகவல்கள் தமக்கும் கிடைக்கப் பெற்றதாகவும், பிரச்சினைகள் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் எனவும் பிரிட்டன் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக