கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் வட மாகாண ஆளுனரின் கட்டளைக்கு அமைவாக நியாயமான காரணங்களின்றி வடக்கு மாகாணக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப் படுவதாக அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கிளிநொச்சி கல்வி வலயத்தினைச் சேர்ந்த அலுவலர்கள் அவரது இடமாற்றத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து நேற்று (27-10-2010) பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக கல்விப் பணிப்பாளரின் தொடர்ந்தும் கிளிநொச்சி வலயப் பணிப்பாளராக கடமையாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். குருகுலராஐh அவர்கள் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் ஆளுனர் மேற்கொண்ட நடவடிக்கை கல்விப் பணிப்பாளர் அவர்கள் கல்வித்துறைக்கு ஆற்றிய சேவையினை அவமதிப்பதாக அமைந்துள்ளது
ஆளுனரின் ஏதேச்சாதிகார நடவடிக்கையால் முல்லை வலய கல்விப் பணிப்பாளர் அவர்களும் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி திடீர் பணி மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
அதே போன்று கிளிநொச்சி உதவி விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் அவர்களது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
ஆளுனரின் இந்த ஏதேச்சாதிகார நடவடிக்கையை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பேரினவாத மேலாதிக்க சிந்தனையோடு எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகம் யுத்தத்தில் தோற்றகடிக்கப்பட்டுள்ளது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதனை மீண்டும் மீண்டும் தமிழ்ச் சமூகத்திற்கு சுட்டிக்காட்ட விரும்பும் பேரினவாதவிருப்பத்தின் பாற்பட்டதேயாகும்.
தம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது விடயத்தில் எவ்வித நீதி நியாயங்களும் தேவை இலலை என்ற அடிப்படையிலும் சிங்களத் தலைமைகள் தாங்கள் எடுக்கும் எத்தகைய முடிவுக்கும் தமிழ் மக்கள் அடிபணிந்து நடந்தேயாக வேண்டும் என்பதாகவும் அமைகின்றது.
யுத்தத்தில் தம்மால் வெற்றி கொள்ளப்பட்ட தமிழ் மக்களை முழுமையான தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி அவர்கள் எவ்வித அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க முடியாதவர்களாக மட்டுமல்லாது அடிப்படை மனித உரிமைகளுக்காகக் கூட குரல் கொடுக்கத் திராணியற்றவர்களாக மாற்ற சிங்களத் தலைமைகள் முயல்வதனையே இச் செயற்பாடுகள் உணர்த்துகின்றது.
ஆனால் இந்த தோல்வி மனப்பான்மைக்கு உட்படாமல் தமது சக உத்தியோகத்தருக்கு அநீதி இழைக்கப்பட்டபோது பணியாளர்கள் ஒன்றுபட்டு போராடியமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணி பாராட்டுகின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக