வியாழன், 28 அக்டோபர், 2010

தமது சுடுகாட்டிற்குக் கூட செல்ல முடியாதநிலையில் வற்றாப்பளை மக்கள்!

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் எங்களை மீள்குடியமர்த்திய அரசாங்கம் எங்களது சொந்த நிலங்களில் விவசாயம் மேற்கொள்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே எங்களின் சொந்த நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அனுமதி பெற்றுத்தரவேண்டும் என வற்றாப்பளைக் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம் கோரியுள்ளனர்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தற்போதைய நிலைப்பாடு குறித்து நேரில் கேட்டறிவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அரசாங்க அதிபரை முதலில் சந்தித்து இதுபற்றி விபரங்களைக் கேட்டறிந்து கொண்டதுடன் வற்றாப்பளைக் கிராமத்திற்கும் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளார்.

அப்பகுதி மக்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது,

எமது கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் செய்யும் எங்களுடைய விளை நிலங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கேப்பாப்புலவு கிராமத்தில் உள்ள உடையாவெளி, பொருக்கல் மோட்டை, இயக்கலைக்குளம், பிரம்படி, மாவட்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

அங்கு சென்று விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இராணுவம் அனுமதி வழங்கவில்லை. இதனால் நாங்கள் அரசாங்கம் தரும் நிவாரணத்தையே நம்பி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இதேவேளை கேப்பாப்புலவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களில் இருந்து வந்து வற்றாப்பளைப் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சிறிய தற்காலிக குடிசைகளில் தங்கியுள்ளனர்.

இவர்களும் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள். வற்றாப்பளை பகுதி மக்கள் பயன்படுத்திவந்த இந்து மயானம் கேப்பாப்புலவுக் கிராமத்தில் அமைந்துள்ளது.

இந்த மயானம் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் சடலங்களை தகனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று, நான்கு கிலோமீற்றருக்கு அப்பால் சென்று தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நின்மதியாக வாழலாம் என்று சொந்த இடத்தில் மீள்குடியேறிய போதும் தொடர்ந்தும் துன்பங்களையே அனுபவித்து வருகின்றோம். எனவே நாங்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கும், சொந்த இடங்களில் விவசாயம் மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அப்பகுதி தொடர்பில் முடிவெடுக்கவல்ல அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது கண்ணிவெடி அகற்றப்படாததே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக