மாவீரர்கள் ஹோட்டல்களுக்கு சென்ற வேளையில் விபத்துக்குள்ளாகி மரணித்தவர்கள் அல்ல. அவர்கள் பசி, தாகம், மானம், என்பவற்றை எதிர்நோக்கி சாகும் வரை கடுமையான பயிற்சியும், ஓய்வுமின்றி வாழ்ந்தவர்கள், அணிமாறி அணிமாறி ஸ்ரீலங்கா இராணுவம் போரிட தண்ணீர் குடிக்க நேரமின்றி இறந்தவர்கள், மரணம் வரை இமையுடன் இமையை மூடாதவர்கள். இவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலேயே மாவீர்தின நிகழ்வுகள் புலத்தில் அமைந்தள்ளதுடன் கொத்துரொட்டிவிற்பனையும், அலங்கார மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனையாகும் திருவிழாவாகவும் அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கை இராணுவம் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததையடுத்து நிம்மதியிழந்து வாழும் தமிழ் மக்கள் இந்நிலமைக்கு யார் காரணமோ? என தவித்து நிற்கும் இவ் வேளையில் புலத்து வாழ் புலிகள் என கூறிக்கொள்வோர் தங்களுக்கிடையே கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
புலிகள் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டதை ஜீரணிக்க முடியாதுள்ள இவ் வேளையில் நடுத்தெருவிற்கு வந்துள்ள தமது வாழ்க்கையை குறித்து தாயகத்து வாழ் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கின்றான்.
அடிப்படையில் ஒற்றுமையை தமிழ் மக்களிடையே ஏற்டுத்த முடியாமையே தமது அழிவிற்கு ஓரே காரணம் என தமிழர்கள் கருதுகின்றார்கள்.
ஏற்பட்டுள்ள பாரிய மனித அழிவின் பின்னராவது தமிழன் திருந்துவானா? என்பது அமைதியை விரும்பும் தமிழனின் ஏக்கம்.தற்போது ஏற்பட்டுள்ள இவ் நெருக்கடியான சூழலில், வடக்கு கிழக்கிலுள்ள வளங்களை அதிகாரத்தை கைப்பற்றியுள்ள அரச குடும்பம் சுருட்டுவதில் குறியாக இருப்பதுடன், தமிழர்களை பொருளாதார ரீதியிலும் நசுக்குவதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
குண்டுச் சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றை ஒவ்வொரு தமிழனின் மீதும் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது என்று கூறுவதில் தவறில்லை என்றளவிலே நிலைமையுள்ளது.
இவ் மறைமுக யுத்தத்தை உணர்ந்து கொள்ளாத, நீண்டகால அடிமைகளான வெளிநாட்டு வாழ் தமிழ் அகதிகள் தமது விடுமுறைக்கு நாட்டுக்கு சென்று திரும்பி அங்கு ஒரு பிரச்சனையுமில்லை என்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கு முறையான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக வன்முறை அரசியல் மரபுகளை புகுத்தியதன் விளைவே இக் கூற்று என்ற வகையில் அவர்கள் கூறுவதிலும் நியாயமுள்ளது.
மேலும் “ஸ்ரீலங்காவில் அமைதி நிலவுகின்றது” என்ற பிரசாரத்திற்காக விடுமுறைக்கு திரும்பும் வெளிநாட்டுவாழ் தமிழ் அகதிகளை அரசு பெருமளவில் நம்பி இன்று அதிலும் வெற்றிகண்டுள்ளது.
இதனால் மீள் குடியமர்வு என்ற போர்வையில் சிறையிருப்பில் இருக்கும் தாயகத்து வாழ் மக்களின் அவலங்கள் மூடிமறைக்கப்படுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் புலன் விசாரணைகளை எதிர் கொள்ளும் மக்கள் கடும் உளவியல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். தொடர் வற்புறுத்தல்களினால் தாம் தப்பிவிடுவதற்காக தவறான தகவல்களையும் வழங்குகின்றனர்.
மேலும் மாவீரர்களான தமது உறவுகளின் நிழலைதனும் காணமுடியாமல் குமுறுகின்றவர்கள் எத்தனை பேர். தினமும் வடிக்கும் கண்ணீர்களுக்கு அளவேயில்லை.இந்த அவலங்களை எள்ளளவும் புரிந்து கொள்ளாமல் புலத்து புலிகள் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இவ் மோதல்களின் பின்னனி என்ன?
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்களை துடைக்க வேண்டிய அதிகமான பொறுப்பும் அவர்களுக்கேயுள்ளது.
முக்கிய கடைமைகளை மறந்து பிளவுபட்டு நிற்பது தமிழர்களை மேலும் தலைகுனியவே வைக்கும்.
யுத்தம் முடிவடைந்த ஆறு மாதத்தில் சந்தித்த முதலாவது மாவீரர் தினத்தில், சுமார் நான்கு மாவீரர் தின உரைகள் வெளியிடப்பட்டது இதில் எதை ஏற்றுக் கொள்வது என மக்களிடையே குழப்பம்.
தாயகத்திலே மாவீரர் துயிலும் இல்லங்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளன, யாழில் நிலைகொண்டிருக்கும் 51ம் படையணியின் தலைமைக் காரியாலயம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்படவுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் புலத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதை தாயகத்தில் வாழும் மாவீரர் குடும்பங்கள் எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்? அத்துடன் அரசும் கடும் கொதிப்புடனே அந்த வாரத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. இவைகள் தமிழனுக்கு மிஞ்சியிருக்கம் சிறு பலம்.இச் சிறு பலத்தையும் சிதறடிப்பதற்கே ஸ்ரீலங்கா அரசு முனைப்புடன் இருக்கின்றது. அதற்கு வழியமைப்பதாகவே புலத்து புலிகளுக்கிடையிலான மோதல்கள் அமைந்திற்கின்றன.
பிளவுபட்டிருக்கம் இக்குழுக்களுக்கிடையில் ஊடுருவி, இருக்கும் பலத்தையும் சிதைப்பதற்கு நீண்ட நேரம் தேவையில்லை.
பாக்கிஸ்தானில் கிரிக்கட் குழுவின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்திற்கு புலிகளே பொறுப்பு என ஸ்ரீலங்கா எவ்வளவு இலகுவாக கூறியதோ, அதே போன்று ஒரு சம்பவத்தை புலம் பெயர் நாடுகளிலும் செய்துவிட்டு புலத்து புலிகளின் இரு குழுக்களுக்கிடையிலான மோதல் என கூறுவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?
குழு மோதலையோ? சிறு இரத்த கலரியையோ? புலம் பெயர் தேசத்தில் ஏற்படுத்தவதற்கு அதிகநேரம் செல்லாது, தற்போது ஏற்பட்டுள்ள பிளவு நிலை ஊடுருவலுக்கு சிறந்த வழியாக திகழும், அவ்வாறு ஒரு சம்பவம் நிகழுமாயின் அதனை குறிப்பிட்ட நாட்டுக்கு ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையாக ஸ்ரீலங்கா மும்முரமாக பிரசாரம் செய்து அத்தனை செயற்பாடுகளையும் ஒரே தடவையில் முடக்கிவிடும்.
மேலும் ஒற்றுமையின்றி காணப்படும் தமிழ் அமைப்புக்களால் பிரமாண்டமாக நிகழ்த்தப்படும் நிகழ்வுகளுக்கு, தற்காலிகமாக அனுமதிகளை ரத்துசெய்வது அந்ததந்த நாடுகளின் பாதுகாப்புக்கும் உகந்தது.
மேலும் மாவீரர்கள் ஹோட்டல்களுக்கு சென்ற வேளையில் விபத்துக்குள்ளாகி மரணித்தவர்கள் அல்ல. அவர்கள் பசி, தாகம், மானம், என்பவற்றை எதிர்நோக்கி சாகும் வரை கடுமையான பயிற்சியும், ஓய்வுமின்றி வாழ்ந்தவர்கள், அணிமாறி அணிமாறி ஸ்ரீலங்கா இராணுவம் போரிட தண்ணீர் குடிக்க நேரமின்றி இறந்தவர்கள், மரணம் வரை இமையுடன் இமையை மூடாதவர்கள். இவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலேயே மாவீர்தின நிகழ்வுகள் புலத்தில் அமைந்தள்ளதுடன் கொத்துரொட்டிவிற்பனையும், அலங்கார மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனையாகும் திருவிழாவாகவும் அமைந்துள்ளது.
உண்மையில் தாயகத்தை நேசிப்பவர்களாக இருந்தால் இம் மாவீரர்கள் நினைவு கூரப்படும் மண்டபத்தில் நிகழ்த்தும் இவ் வியாபாரங்களை நிறுத்துங்கள்.
தாய் நிலத்தில் கால் மிதிக்கும் முன் உங்கள் மனதையும் கால்கலையும் கழுவுங்கள்.
- வின்சன் ஜெயன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக