நிரந்தர சமாதானம், தேசிய நல்லிணக்கம் ஆகியன இலங்கையில் ஏற்பட வேண்டுமானால் அங்கு இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள், சர்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டங்கள் மீதான மீறுகைகள் ஆகியன குறித்து கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்காவின் San Diego நகரில் அமைந்துள்ள World Affairs Council இல் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தென்னாசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் இவ்வாறு வலியுறுத்தினர்.
”யுத்தத்தால் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் காயங்களைப் பொருளாதார அபிவிருத்தியால் மாத்திரம் ஆற வைக்க முடியாது. பொருளாதார அபிவிருத்தி மாத்திரம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தையோ, செழிப்பையோ ஏற்படுத்தி விடப் போவது இல்லை.
உள்ளூராட்சித் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் ஆகியவற்றை வடக்கில் இயலுமான விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் சமுதாயத்துடன் இவ்விடயத்தில் இணைந்து செயற்படுதல் வேண்டும்.
நீதியான தேர்தல் மூலம் சிறந்த தலைமைத்துவத்தை பெற்றுக் கொள்ளும் கடந்த முப்பது வருட காலத்துக்குப் பிறகாவது தமிழர்களுக்கு அம்மாகாணத்தில் கிடைக்க வேண்டும். நிரந்தர சமாதானமும், உண்மையான தேசிய நல்லிணக்கமும் இலங்கையில் ஏற்பட வேண்டுமானால் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள், சர்வதேச மற்றும் மனித உரிமை மீறல் சட்டங்கள் ஆகியன குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக