எனது கணவர், மருமகனை சுட்டுக் கொன்றுவிட்டனர். மகன், மகளை கடத்திவிட்டனர். மகளை கடத்தியவரை எனக்கு தெரியும். அவரிடம் மகளை கேட்டால் வீட்டிற்கு குண்டு வீசி அழித்து விடுவதாக மிரட்டுகிறார் என்று மூதாட்டி ஒருவர் நேற்று செங்கலடியில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
அத்துடன், மகளை கடத்தியவரை கண்டால் அடையாளம் காட்டுவேன். எனினும் நீண்ட நாட்களாகவே அவரை இப்பகுதியில் காணக் கிடைக்கவில்லை. மகளும் திரும்ப வில்லை என்றார்.
செங்கலடி பிரதேச செயலகத்தில் வைத்து கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனது கணவர் கோபாலப்பிள்ளையை 1985 ஆம் ஆண்டு இராணவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர். எனது மகன் வசந்தகுமாரை 1998 ஆம் ஆண்டு சீருடை தரித்தவர்கள் கடத்திச் சென்றுவிட்டார்கள்.
எனது மருமகன் விநாயகம் கமலதாசனை 2006.07.28 அன்று கிண்ணியடியில் வைத்து ரி.எம்.வி.பி. யினர் சுட்டுக் கொன்றுவிட்டனர். சுட்டவரை நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும்.
தனது மகள் கோபாலப்பிள்ளை பாக்கியலெட்சுமியை கொழும்பிலிருந்து வரும் வழியில் கருணா குழுவைச் சேர்ந்த சீலன் என்பவரே கடத்திச் சென்றார். அவர் பற்றி இதுவரை எதுவித தகவலும் வெளிவரவில்லை.
பொலிஸில் முறைப்பாடு செய்தபோது அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மகள் தனது கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொண்டு கிரான் வந்தவுடனேயே கடத்திச் செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். எனது மகள் வெளிநாடு செல்வதற்காக பெருந்தொகையான பணம் வைத்திருந்தார்.
கடத்திச்சென்ற சீலனிடம் பலமுறை சென்று கேட்டபோது, இனிமேல் வந்தால் வீட்டிற்கு குண்டு வைப்போம் என மிரட்டினார்.
இவ்விடயம் சம்பந்தமாக அவர்களின் இயக்க பொறுப்பாளர்களைச் சந்தித்து கேட்டபோதும் அவர்கள் என்னை தூசணத்தினால் ஏசினார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக