யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 06ல் நடைபெறுகிறது. நான்கு அமர்வுகளில் நடைபெறும் இந்த விழாவின் மூலம் 1075 பேர் பட்டம் பெறுகிறார்கள். தமிழ் பேசும் சமூகத்தின் முக்கியமான கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பங்கை வகிக்கிறது.
இன்று தமிழ் மக்கள் வாழ்வுக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சுய அடையாளங்களுக்காகவும் உரிமைக்காகவும் வாழ் நிலத்திற்காகவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று எங்களிடம் இருக்கும் கருவியாகவும் கருத்தாகவும் இறுதிச் சொத்தாகவும் கல்விதான் இருக்கிறது. இந்தப் பட்டத்தினைப் பெற்றுச் செல்லும் நாம் நமது சமூகத்திற்காய் உழைக்க வேண்டிய பெருங்கடமையில் இருக்கிறோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் மூலம் எட்டாயிரம் பேர் பட்டம் பெற்றிருந்தார்கள். உலகத்தில் வெறு எங்கேனும் அப்படி ஒரு பட்டமளிப்பு விழா இடம்பெற்றிருக்காது என்றே நினைக்கிறேன். 2005ஆம் ஆண்டின் பிறகு ஏற்பட்ட யுத்தம் காரணமாக வருடா வருடம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா நான்கு வருடங்களாக நடைபெறாமலிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குரிய மாணவர்களும் மூன்று நாட்களில் நடைபெற்ற 15 அமர்வுகளில் 3328 பேர் பட்டங்களைப் பெற்றார்கள்.
இந்தப் பல்கலைக்கழகம் யுத்தத்தின் விளைவுகளுக்கு அதிகம் முகம் கொடுத்து வந்திருக்கிறது. தமிழ் தேசிய இனத்தின் மீதான ஓடுக்கு முறைக்கு எதிரான ஆழமான கருத்தியலை தெளிவாக அறிவுரீதியாக உருவாக்கியதில் யாழ் பல்கலைக்கழக சூழல் பங்காற்றியிருக்கிறது. ஈழப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் விரிந்த உரையாடலை முன்னெடுத்த களமாக இந்த வளாகம் இருந்திருக்கிறது. இன்று பட்டம் பெறும் நிலையில் இந்த மாணவர்கள் கடந்த காலத்தை எப்படி கடந்து வந்தார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றைப் பொறுத்த வரையில் 2006 ன் பின்னர் ஒரு இடர்மிக்க காலத்தை கடந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பொழுது யுத்தம் எமது இனத்தை வதைத்துக் கொண்டிருந்த பொழுது அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் எதையும் செய்ய முடியாத கையறு நிலைச் சூழலுக்குள் பல்கலைக்கழக சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.
தினமும் நிமிடத்திற்கு நிமிடம் மரணத் தொகை பற்றிய செய்திகளுக்குள் தங்கள் உறவுகளை நினைத்து இந்த வளாகத்திலும் விடுதியிலும் மாணவர்கள் துடித்தபடி இருந்திருக்கிறார்கள். கடுமையான உயிர் அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்குள்ளும் அப்பொழுது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தன் பணியை செய்து கொண்டிருந்தது. விரிவுரைகள் புறக்கணிப்பட்டும் தமிழ் மக்களின் நிலமை எடுத்துச் சொல்லப்பட்டது. ஈழத் தமிழ் மக்கள் மீதான கொடும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி சமாதான வழிகளுக்கு சென்று வன்னி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சமூகத்தால் தொடர்ந்தும் குரல் கொடுக்கப்பட்ட பொழுதும் யுத்தம் நீடிக்கப்பட்டு மக்கள் அழிவு நீடிக்கப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலைகளால் கல்வி கற்கும் மாணவர்களது நிலைமை பாதிப்பிற்கு உள்ளான பொழுது இந்த மாணவர்களை உளவியல் ரிதியாக அணுகி கல்வி கற்பித்து வந்த விரிவுரையாளர்களின் பணி முக்கியமானது. பல விரிவுரையாளர்கள் மாணவர்களது எதிர்காலத்திற்காய் அந்நாட்களில் அக்கறையுடன் கவனித்து செப்பனிட்டிருக்கிறார்கள். யுத்தக் கனவு கண்டு மாணவர்கள் துடிக்கும் விடுதிகளும் உறவுகளின் நினைவுகளால் பேசித் துடிக்கும் வளாகமும் அந்நாட்களில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்கொண்ட துயர்கொண்ட கதைகள் மிகத்துயரமானவை. எங்களைப் பற்றி நாங்களே பேசும் நிலை மறுக்கப்பட்டு அபாய வலை கொண்ட சூழலாக பல்கலைக்கழகம் காண்காணிக்கப்பட்டது.
பெற்றோர்களது தொடர்பற்று துடித்த பல்கலைக்கழக மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை கவனித்து அவற்றை பூர்த்தி செய்வதில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் நிர்வாகமும் அன்று முழுமையாக இயங்க வேண்டியிருந்தது. பெற்றோர்களிடமிருந்து நிதி வந்தால்தான் படிக்கலாம் என்ற வன்னி மாணவர்களின் நிலை 2009 அக்டோபர் மாதத்திலேயே முற்றாக பாதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான முழு நேர உணவு, நிதி உதவிகளை பல்கலைக்கழகம் மேற்கொள்ளுவதற்கு பலரது பங்களிப்பு கிடைத்திருந்தது.
துயர்க்கால மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் முழு அக்கறை கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் அவர்களின் பணி காலத்தால் மேன்மையானது. அகில இலங்கை இந்துமாமன்றம், போஸ்டோ, மனித உரிமைகள் இல்லம், கரிதாஸ் நிறுவனம் போன்றவை இந்தப் பணியில் பங்கெடுத்தன. சில புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடாக தமது உதவிகளை செய்து வந்தார்கள்.
பெற்றோர்கள். உறவுகளை இழந்து பல மாணவர்கள் துடித்தார்கள். யுத்தம் முடியும் தருணத்தில் நிறைய மாணவர்களின் பெற்றோர்கள், உறவுகள் கொல்லப்பட்டதாக அறிய நேர்ந்தது. சிலர் குடும்பத்துடன்கூட உறவுகளை இழந்தார்கள். இதே காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு விசாரணைகளும் தேடுதல்களும் நுழைவுகளும் நடந்தன. பல்கலைக்கழகத்தில் எல்லா வகையிலும் மேலும் மேலும் கல்விக்கு மாறான சூழலே நிர்ப்பந்திக்கப்பட்டது. கல்வியை தொடர முடியாத இடர்காலத்திலும் எப்படி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் மூலம் மாணவர்களது மனநிலைகளை பாதுகாக்க வேண்டியிருந்தது.
யுத்தம் பேரழிவுடன் முடிந்த பொழுது ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நலன்புரி நிலையம் எனப்படுகின்ற தடுப்பு முகாங்களில் இருந்தார்கள். முன்னாள் போராளிகளாகவும் தடுக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தின் அடுத்த பிரச்சினையாக அதுவே உருவெடுத்தது. நாளும் பொழுதுமாக தடுப்பு முகாங்களில் உள்ள மாணவர்களது கடிதங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து கொண்டிருந்தன. தங்களை மீட்க வேண்டும். தாங்கள் படிக்க வேண்டும். அவர்கள் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் காரணமாக சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக கல்வியை தொடராதவர்கள் கூட முகாங்களில் இருந்தார்கள்.
முகாமில் உள்ள மாணவர்கள் பல்வேறு கட்டங்களில் பலதரப்புக்களின் ஊடாக கோரியதற்கிணங்க கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டார்கள். முதலில் ஐம்பது மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய மாணவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். இந்த விடயத்திலும் துணைவேந்தரது அயராத முயற்சியும் உழைப்பும் இருந்தது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அதற்காக சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. அப்படி மீட்கப்பட்டு வந்த பல மாணவர்கள் நாளைய பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகிறார்கள். யுத்தத்தின் காயங்களும் அங்க இழப்புக்களுக்கும் உள்ளான மாணவர்கள் பலர் நாளை பட்டம் பெறுகிறார்கள். இதைப்போலவே முன்னாள் போராளி மாணவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடருகிறார்கள். அவர்களில் சிலரும் பட்டம் பெறுகிறார்கள்.
யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களும் இடர்களும் பல்கலைக்கழகத்தை இப்படியே கடுமையாக பாதித்தது. இன்று பட்டம் பெறுகிற மாணவர்கள் இத்தகைய நிலையிலேயே தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களது கல்வி, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான தேவைகள், உளவியல் ரீதியாக சூழலுக்கு ஏற்ப அணுகுவது என்பவற்றின் ஊடாக நமது சமூகத்திற்கு வலுவான சந்ததியை உருவாக்கும் முக்கியமான பணியாகவே இந்த பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.
கலை ரீதியாகவும் மனிதாபிமான ரீதியுயாவும் கடந்த காலத்தில் பணி செய்த சிலர் இந்த பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப் பட்டங்களை பெறுகிறார்கள். சத்திரசிகிச்சை நிபுணராகவும் யாழ் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் முக்கியமானவரும் நெருக்கடி மிக்க காலத்தில் தாய்நிலத்தில் பணியாற்றியவருமான வைத்தியக்கலாநிதி கணேசரத்தினம், பாரம்பரிய கலைகளிற்கு மதிப்பளிக்கும் முகமாக நாதஸ்வர வித்துவான் பஞ்சாபிகேசன், திருமறைக் கலாமன்ற இயக்குனரும் நாடக்கலை என்ற பண்பாட்டு தொடர்பாலுக்கு பங்காற்றியவரும் கலைமுகம் இதழின் ஆசிரியருமான வணக்கத்திற்குரிய மரிய சேவியர் அடிகளாரும் பட்டம் பெறுகிறார்.
அத்துடன் விழிப்புலனற்ற பிள்ளைகளை கல்வி கற்பித்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வாழ்வில் ஒளியேற்றிய பணியை ஆற்றியவரும் ‘வாழ்வகம்’ என்ற விழிப்புலனற்ற பிள்ளைகளுக்கான இல்லத்தை உருவாக்கியவருமான அமரர் செல்வி சின்னத்தம்பி தேகாந்திர நிலையில் (அமரத்துவமடைந்த நிலையில்) பட்டமளித்து கௌரவிக்கப்படுகிறார். இம்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களும் முதன் முதலில் பட்டம் பெறுகிறார்கள்.
இன்று அவலம் மிகுந்து போயிருக்கிற எங்கள் சமூகத்திற்காய் பட்டம் பெறும் மாணவர்களாகிய நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பரந்த நிலமெங்குமிருந்து வந்த நாம் ஓவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சமூக அக்கறையுடன் வினைத்திறனாக செயற்பட வேண்டும்.
சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக வாழ வேண்டும். பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த காலத்தை கடந்து கல்வி கற்று பட்டம் பெறும் நாங்கள் சிதைந்து தவித்துக் கொண்டிருக்கிற நமது சமூகத்திற்காய் நமது தேசத்திற்காய் உழைக்க வேண்டிய இன்றைய காலத்தின் பொறுப்புடையவர்கள். இருண்டிருக்கிற நமது காலத்திற்கு ஒளி ஏற்றுவோம்.
பாலேந்திரன் பிரதீபன்., B.A (Hons) Tamil SPL
முன்னாள் செயலாளர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக