ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறும் நோக்கில் நியமித்துள்ள நிபுணர் குழு எழுத்து மூல போர்க்குற்ற சாட்சியங்களை கோரியுள்ளமை தொடர்பில் அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் அந்தக் குழுவை நாம் ஏற்கனவே நிராகரித்து விட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பான் கீ. மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெறும் நோக்கில் நியமித்துள்ள நிபுணர் குழு, எழுத்துமூல போர்க்குற்ற சாட்சியங்களைச் கோரியுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை விவகாரம் தொடர்பில் எமது தரப்பில் கடந்த காலங்களில் தவறுகள் இடம்பெற்றுள்ளனவா? என்று ஆராய்வதற்கே ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளதுடன் அதன் அமர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. பலதரப்பட்டோர் அதன் அமர்வுகளில் சாட்சியமளித்து வருகின்றனர்.
இதேவேளை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் அமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. நாங்கள் இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை.
அதாவது, நல்லிணக்கம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்று அண்மையில் சர்வதேச மட்டத்திலான மூன்று அமைப்புக்கள் கூறியிருந்தன. குறித்த மூன்று அமைப்புக்களும் பிரஸல்ஸ், நியூயோர்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாது என்ற விடயத்தை ஒரே நாளில் தெரிவித்துள்ளன.
இந்த அமைப்புக்களின் பின்னணியில் ஒரு மறைகரம் செயற்படுகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. இந்த மறைகரம் எதுவாக இருக்கும் என்பது தொடர்பில் எங்களிடம் சில தகவல்கள் உள்ளன. ஆனால் இதுவரை எம்மால் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் உள்ளது. ஆனால் விரைவில் விடயங்களை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் தகவல்களை வெளியிடுவோம் என்றார்.
இதேவேளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு அமர்வுகளின் முடிவில் முன்வைக்கவுள்ள அறிக்கையின் பிரதி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு எம்மால் வழங்கமுடியும் என்று அமைச்சர் ரம்புக்வெல கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக