வியாழன், 11 நவம்பர், 2010

யோகரட்னம் யோகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்களை படையினர் பஸ் ஒன்றில் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்தேன் - யோகியின் மனைவி ஜெயவதனி

தனது கணவர் யோகரட்னம் யோகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய  உறுப்பினர்களை பஸ் ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை தான் நேரில் கண்டதாக யோகரட்னம் யோகியின் மனைவியான ஜெயவதனி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஜெயவதி   இவ்வாறு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்  வட்டுவாகலில் மே 18ம் திகதி தனது கணவரை படையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதை தான் நேரில் கண்டதாகவும் அவருடன் புதுவை ரத்தினதுரை ,பேபி சுப்ரமணியம், லோரன்ஸ் திலகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்ளடங்கியிருந்ததாகவும் ஜெயவதனி உறுதிப்படுத்தினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு படையினர் தொடர்ச்சியாக அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருந்ததாகவும் இதனை அடுத்தே தனது கணவர் பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனும் படையினரின் அறிவிப்பினை அடுத்து சரணடையும் முடிவை எடுத்திருந்ததாகவும் ஏற்கனவே சரணடைவதாக முடிவு இருந்த நிலையிலேயே இந்த சரணடையும் நிகழ்வு இடம்பெற்றதாகவும் ஜெயவதனி தெரிவித்தார். என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று வரை தனது கணவர் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை யோகியும் வேறும் அவருடன் 50க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்டு சென்றதை தான் நேரில் கண்டதாக தெரிவித்த அவர் அவர்களைக் கொண்டு சென்ற படையதிகாரிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர்களை அடையாளம் காண முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் இது தொடர்பாக பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுவினர் இந்தக் கோரிக்கை தொடர்பாக  பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே 2010 ஓகஸ்ட் மாதம் தாங்கள் இது தொடர்பான முறைப்பாடொன்றை செய்திருப்பதாகவும் ஜெயவதனி தெரிவித்தார்.

குறிப்பாக விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக யோகியின் மனைவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே யாழ் குடாநாட்டிலும் வன்னியிலும் காணாமல் போன பலர் தொடர்பான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களும் இன்றைய வாக்குமூலத்தில் பதியப்பட்டது. அடுத்த கட்;டமாக நீர்வேலியில் வாக்குமூலங்கள் பதியும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில்  ஆரம்பம் :

நீண்ட கால இடைவெளியின் பின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியது.

இன்று காலையில் குருநகர்ப்பகுதியில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த போதிலும் அங்கு நடைபெறாததன் காரணமாக 60 க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்து விட்டுச் சென்றதாகவும் இலங்கை நேரம் 3மணியளில் அரியாலையில் இந்த அமர்வுகள் ஆரம்பமாகியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக