வியாழன், 11 நவம்பர், 2010

இனத்துரோகம் செய்யும் அதிகாரிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள்: வலம்புரி நாளேடு காட்டம்

தமிழரின் வதையை தமக்கு இலாபமாக்கி பதவியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவோர் மத்தியில் சூரன் நல்லவன். தமது பதவி நாற்காலிகளுக்காய் தனது இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் ஏமாற்றுப் பேர்வழிகள், கலாசாரச் சீரழிவை திட்டமிட்டு ஏற்படுத்துவோர், ஊழல் புரிவோர், பொதுச் சொத்தை கொள்ளையிடுவோர்

இவர்களை விடவா சூரன் பொல்லாதவன்! என யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளேடு இன்று ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

யாழ்புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று முன்தினம் இராவோடு இராவாக நாவற்குழிப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என யாழ். அரச அதிபர் மறுத்துள்ளார். அரச அதிபரிற்குத் தெரியாமலே மீள்குடியமர்வா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குடாநாட்டு அதிகாரிகளின் சேவை மனப்பான்மையில்லாமல் எதிலுமே ஆதாயம் தேடுவோர். எனச் சுட்டிக்காட்டியுள்ள நாளேடு அவர்கள் கந்தபுராண தர்மத்தின்படி அழிக்கப்பட வேண்டியவர்கள் என காட்டமாக ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

அவ் ஆசிரியர் தலையங்கம் வருமாறு

இன்று சூரன் போர். ஆணவச் செருக்குக் கொண்ட சூரனை வதம் செய்யும் நாள். ஆணவம் கொடியது. ஆண்டவனை ஆன்மா பற்றிப்பிடிப்பதற்கு அதுவே தடை. ஆகையால் ஆணவம் அழிக்கப்படவேண்டும் என்பதால் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.

சூரனை வதம்செய்வதற்கு முன்னதாக தனது சேனாதிபதி வீரவாகுதேவரை தூது அனுப்புகிறார். தூது தோல்வியில் முடிகின்றது. தன் திருப்பெருவடிவத்தையும் முருகன் சூரனுக்குக் காட்டுகின்றார்.முருகப் பெருமான் விஸ்வரூபத்தை காட்ட சூரன் திகைக்கிறான். கூப்பிய கரத்தினனாய் உச்சிமேற் கையைத் தூக்கித் தொழுகின்றான்.

ஆணவச் செருக்குடைய சூரன் மட்டுமே கந்தப்பெருமானின் திருப்பெருவடிவத்தை காணும் பேறுபெற்றான். அகந்தை அழியாமலே ஆண்டவனின் திருப்பெருவடிவத்தைக் கண்டனுபவித்த பெருமை சூரனுக்கே உண்டு. ஆகையால் சூரன் நல்லவன், உயர்ந்த சிந்தனை உள்ளவன் என்பது தெளிவாகின்றது.

எனினும் கந்தபுராணம் தந்த கச்சியப்பரும் கந்தபுராணத்தில் சூரனை நல்லவனாகக் காட்ட முற்பட்டிலர். அதற்கும் காரணமுண்டு. கச்சியப்பரின் காலப்பகுதியில், ஆணவம் கொண்டோரே கேடுவிளைவிப்பவர்களாக இருந்தனர். அதனால் கச்சியப்பர் சூரனை நல்லவனாகக் காண முற்படவில்லை.

ஆனால், இப்போது எங்கள் இலங்கையில்- எங்கள் தமிழ்ப் பிரதேசங்களில்- யாழ்ப்பாண மண்ணில்- அரசியல் புலத்தில் இருக்கும் பலரோடு ஒப்பிடும்போது சூரன் மிகவும் நல்லவன்.

கேடு நினைக்காப் பெருமையாளன். அத்தனை நல்லவனை அழிப்பதோ அல்லது அவனோடு போர் தொடுப்பதோ நன்றன்று.

மாறாக அழிக்கப்படவேண்டியவர்கள் ஏராளம் பேர் இங்குளர். சேவை மனப்பான்மையில்லாமல் எதிலுமே ஆதாயம் தேடுவோர். தமிழரின் வதையை தமக்கு இலாபமாக்கி பதவியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவோர். ஏமாற்றுப் பேர்வழிகள், கலாசாரச் சீரழிவை திட்டமிட்டு ஏற்படுத்துவோர், ஊழல் புரிவோர், பொதுச் சொத்தை கொள்ளையிடுவோர் இவர்களைவிட வா சூரன் பொல்லாதவன்!

முருகா! சூரனை விட்டுவிடு. அவன் நல்லவன். இங்கிருக்கும் நரகாசூரர்களைக் வதம்செய். இவ் வருடம் சூரன்போர் இதுவாக இருக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக