திங்கள், 1 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் கலை, கலாசார சீரழிவுகள் மட்டுமன்றி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்ளும் முளைவிடுகின்றன.

அமைதிச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தென்பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது போன்றே இச்சுற்றுலாப் பயணிகளினால் ஏற்படும் பிரச்சினைகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.


கலை, கலாசார சீரழிவுகள் மட்டுமன்றி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இன முறுகல்கள் ஏற்பட்டு விடக்கூடிய பாரதூரமான சம்பவங்களும் கடந்த சில நாட்களுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை அமைதியை, சமாதானத்தை, இன சௌஜன்யத்தை விரும்புவோர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. தென்பகுதியிலிருந்து சுற்றுலாவரும் பயணிகளினால் கலை, கலாசார சீரழிவுகள், சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாக இதுவரையில் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் தமது சொந்தக் காணிகள் இருப்பதாகக் கூறிக்கொண்டு குடியேறுவதற்காக வந்து யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்களவர்கள், சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களினால் தந்தை செல்வநாயகத்தின் நினைவிடம் சேதமாக்கப்பட்டமை, யாழ்.பொதுநூலகத்திற்குள் இடம்பெற்ற அடாவடித்தன சம்பவங்கள் போன்றவை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் மூடிமறைப்பு முயற்சிகளும் பக்கச்சார்பான நடவடிக்கைகளும் இவ்வாறான செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்காகவே அமையுமென அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.யும் தந்தை செல்வா அறங்காவல் சபையின் உபதலைவருமான மாவை சேனாதிராஜா எம்.பி.கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகம் மற்றும் தந்தை செல்வா நினைவாலயம் என்பன தமிழ் மக்களால் புனிதமாகவும் பொக்கிஷமாகவும் பார்க்கப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் தென்னிலங்கையிலிருந்து வருவோர் அட்டகாசம் புரிவதையும் தலங்களை அசிங்கப்படுத்துவதையும் எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாதென மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். அத்துடன் யாழ்.நூலகத்திற்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்தோரே தந்தை செல்வா நினைவாலயத்திற்குள்ளும் நுழைந்து அட்டூழியம் செய்துள்ளனரெனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளதுடன் இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வண்ணம் உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக்கொண்டு வரப்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்.பொது நூலகத்திற்குள் நுழைந்த சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் பொது நூலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதம நூலகரினால் விரிவான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை அக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் நிராகரித்துள்ளனர். அத்துடன் இது போன்ற எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும் குடாநாட்டு ஊடகங்கள் இனவாதத்துடன் செய்திகளை வெளியிடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டிய அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பொது நூலகத்திற்குள் நடந்த குழப்பங்களிற்கும் தவறுகளுக்கும் ஓர் அமைச்சரென்ற வகையில் அரசின் சார்பாக மன்னிப்புக் கோருவதாக அக்கலந்துரையாடலின் முடிவில் தெரிவித்திருந்தார்.

மூன்று தசாப்தகால யுத்தப் பிடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போன தமிழ் மக்கள் தமது பழைய கசப்பான அனுபவங்களை மறந்து மீண்டும் ஒரு அமைதியான இனநல்லுறவுடனான வாழ்க்கையை வாழத்துடிக்கையில் தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாவரும் பயணிகளுக்கிடையில் கோடரிக் காம்புகளாக வரும் சில இனவாதப் போக்கு சிந்தனைகொண்ட அதிகாரிகளாலும் அவர்களின் சகபாடிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான நாசகார நடவடிக்கைகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகவேயுள்ளது. 1981 ஆம் ஆண்டு யாழ்.பொது நூலகத்திற்கு இனவாதிகளால் வைக்கப்பட்ட தீயே கடந்த 2009 ஆம் ஆண்டுவரை எமது நாட்டை சுடுகாடாக்கியது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

இனவாத கொடூரத்தின் வெளிப்பாட்டின் நினைவுச் சின்னமாக இதுவரை காட்சியளித்து வந்த யாழ்.பொது நூலகம் தற்போது தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத் தலமாக மாறியுள்ள நிலையில் அங்கு இனவாத ரீதியான விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கும் பாரிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இதனைச் சம்பந்தப்பட்ட தரப்பினர்மட்டுமன்றி சுற்றுலா செல்லும் பயணிகளும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நாம் பெரும்பான்மையினத்தவர் என்ற இனவாத மமதைப் போக்குடன் சிலர் செயற்பட முனைவது மீண்டுமொரு வரலாற்று தவறை செய்வதற்கான முயற்சியாகவே அமைந்து விடும். எனவே வரலாற்றுத் தவறுகளையும் நிகழ்வுகளையும் சிங்களவர்களோ, தமிழர்களோ மறந்துவிடக்கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக