இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித் துள்ள நிபுணர் குழுவுக்கு சாட்சியங்களை அனுப்ப முன்வரும்படி பல்வேறு நாடுகளிலுமுள்ள தமிழ் அமைப்புகள் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தின் போது உயிர்தப்பிய பலர் இன்று வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் தாம் நேரில் அனுபவித்தவற்றையும் நேரில் கண்டவற்றையும் எழுத்துமூல சாட்சியமாக நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவேண்டு மென இந்த அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெளிவாகவும் நிதானமாகவும் தமது சாட்சியங்களை வழங்கவேண்டும் என்று இந்த அமைப்புகள் கோரியுள்ளன. புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள தமிழீழ மக்கள் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்று அவர்களின் உதவியுடன் ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களினது உதவியுடனும் செயற்படலாம் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, இத்தாலி, நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளே கூட்டாக மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமது உறவுகளை சாட்சியமளிக்கும்படி புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக