வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘ஜல்‘ புயல் இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தப் புயல் திருகோணமலையிலிருந்து சுமார் 800 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கின்றது என திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
புயல் இந்தியாவைத் தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாகவும், இதன்போது இலங்கையை ஊடறுத்துச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வட மாகாணத்தை ஊடறுத்துச் செல்லும் இந்தப் புயல் காரணமாக திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்றும், மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தப் புயல் வங்காள விரிகுடாவின் அந்தமான் தெற்கு கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கின்றது என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து தென்கிழக்குப் பகுதியில் ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தில் குறைந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே இரண்டு நாட்களில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக