ஞாயிறு, 7 நவம்பர், 2010

பருவமழை காலத்தின் போது வன்னி மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வர்!

வன்னியிலுள்ள 30ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் கொட்டில்களில் இயங்குவதால் பருவமழை காலத்தின் போது கல்வி கற்க முடியாத நிலையேற்படுமென இலங்கை ஆசியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த மாணவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு வழியான கல்விச் செல்வத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெரிய பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதைவிடுத்து முதலில் மீள்குடியேற்றப்படட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு அது கோரியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தகரத்தினால் அடைக்கப்பட்டு ஓலையினால் வேயப்பட்ட கொட்டகையிலேயே இயங்குகின்றன.

தரையில் சீமெந்து கூட இல்லாத நிலையில் தற்போது ஆரம்பித்துள்ள பருவ மழை காரணமாக அம் மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபடமுடியாத நிலைமை ஏற்படும்.

மாங்குளம் மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்தியகல்லூரி, ஓமந்தை மகாவித்தியாலயம், நொச்சிமோட்டை அ.த.க பாடசாலை, புநகரி அ.த.க பாடசாலை என 30ற்கும் மேற்பட்ட பாசாலைகள் கொட்டில்களிலேயே இயங்கிவருகின்றன. என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக