புதன், 17 நவம்பர், 2010

நாவற்குழி தமிழ் மக்களை வெளியேற்ற முயற்சி!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேறியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டுவருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக கோடி காட்டப்பட்டுள்ளது. தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்களக் குடும்பங்கள் இரவோடிரவாக யாழ்.நாவற்குழியில் அரச காணிகளிலும், தமிழ் மக்கள் முன்னர் வாழ்ந்து வந்த காணிகளிலும் குடியேறியிருந்தனர்.

இச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக காணி இல்லாது வாழ்ந்து வந்தவர்களும், நாவற்குழியில் ஏற்கனவே வாழ்ந்து வந்து அங்கிருந்து வெளியேறியவர்களும் நாவற்குழியில் குடியேறினர்.

இதனை அடுத்து உசாரடைந்த அரசாங்கம் நாவற்குழியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாகவும், வழமைபோல் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுவது போலவும், அதன் பின்னர் வெளியேற்றி அந்த ஏற்பாடு டக்ளஸ் தேவானந்தா மூலம் மேற்கொள்ளப்பட்டதாக காட்ட முற்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் அடிப்படையிலேயே டக்ளஸ் தேவானந்தாவின் அறிக்கை வெளியாகியுள்ளது,

அந்தச் செய்தியின் விபரம் வருமாறு,

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர் விமல் வீரவன்சவும் தம்மிடம் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முயற்சியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள சிங்கள மக்களைச்சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி நல்லதோர் முடிவை ஏற்படுத்த அங்கிருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியும் அமைச்சர் விமல் வீரவன்சவும் என்னுடன் காலையில் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.

சட்டத்துக்கு புறம்பாக தமிழராகிலும் சரி சிங்கள மக்களாயினும்சரி அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்.எனவே இது குறித்து துரித நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் அடிப்படையில் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்காக சிங்கள மக்களையும் அங்கிருந்து வெளியேற்றுவது போன்ற நாடகத்திற்கு அரசும் அமைச்சர் டக்ளசும் தயாராவதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக