சிலரைச் சில காலம் ஏமாற்றலாம், பலரைப் பல காலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்ற உலகறிந்த உண்மையை சகலரும் அறிவர். ஆனால் ஏமாற்றும் எவரும் இந்த விதியை நினைவில் கொள்வது கிடையாது. எப்படியேனும் தமது காரியத்தைச் சாதித்து விடும் வெறியோடு எவர் தலையில் என்றாலும் மிளகாய் அரைத்து சிலர் வெற்றி பெற்று விடுவர். இந்த விடையத்திலும் வல்லவனுக்கு வல்லவன் என்ற உலக இயங்கியல் தத்துவம் செயற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
எனவே உலகின் பல வேறு எதிரி நாடுகளை ஒரே நேரத்தில் ஏதோ காரணத்துக்காக நம்ப வைத்து தனது காரியத்தைச் சாதித்துக் கொண்ட மகிந்தர் இப்போது அந்த நாடுகளுக்குக் கூலி கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால் ஒவ்வொருவரும் அவரிடம் விலையாகக் கேட்பது அவரது கள்ளம் இல்லாத உள்ளத்தை. அவரால் கொடுக்க முடியாத விலையாக இருப்பதும் அதுவே. ஏன் என்றால் அவரிடம் அப்படியான ஒரு உள்ளம் கிடையவே கிடையாது.
இனி இலங்கை பற்றிய உலக நாடுகளின் பார்வையும் அவற்றின் செயற்பாடுகளும் பற்றிய பார்வையைக் கவனத்தில் எடுப்பது அவசியமாக உள்ளது. கடல் வழிப் பயணம் மேற்குலக நாடுகளின் வாழ்வாதார முக்கியத்துவம் பெற்ற நாளில் இருந்து இலங்கை தென் கிழக்கு ஆசியாவில் ஒரு கேந்திர மையமாக உருவாகி விட்டது. இலங்கையும் அதன் வழியாக இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்துக்கு உள்ளான நிலைக்கு இதுவே முதற் காரணியாகும். 1948ல் பிரித்தானிய அரசு இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து என்ற பாதிச் சுதந்திரம் வழங்கவும் திரிகோணமலைத் துறைமுகத்தை தன்னிடமே வைத்துக் கொண்டதும் கடல் வழிப் பாதையில் அதன் முக்கியத்துவம் கருதிய வெளிப்பாடே ஆகும்.
இலங்கையில் சிங்கள அரசியல் வாதிகளைப் பொறுத்த வரை இலங்கையைப் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்பதே நோக்கம். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள இனம் நாட்டின் அதிகாரத்தைத் தமிழர் பிரதி நிதிகளுக்குப் பதவி பணம் கொடுத்தே நாட்டின் அதிகாரத்தைத் தானே எடுத்துக் கொண்டு விட்டது.அரசமைப்புச் சட்டத்தின் மூலம் முழு இலங்கைத் தீவின் இறையாண்மையும் சிங்கள இனத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாக மாற்றி விட்டது. இன்று புது வகையான இன வெறி ஜனநாயக அரசியலை உலகுக்கே அறிமுகம் செய்து தமிழ் இனப் படுகொலையை உலகறிய நடத்தி அதனை நியாயப்படுத்தியும் வருகிறது.
1956 ல் சிங்கள இனவெறி அரசியலை முன்னெடுத்துப் பதவிக்கு வந்த பண்டார நாயக்காவுக்கு தேர்தல் கூட்டாக அமைந்த பிலிப் குணவர்த்தனா போன்ற இடது சாரிகளின் செல்வாக்கு மற்றும் ஆங்கில அறிவற்ற சாதாரண சிங்கள விவசாயிகள் ஏழைகள், தொழிலாளிகளின் நலன் கருதியும் முதலாளித்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். அன்றே சீனாவுடன் அரிசி றப்பர் வர்த்தக ஒப்பந்தம் செய்து தனது மேற்குலக எதிர்ப்பை நேருவுடன் சேர்ந்து அணி சேராக் கொள்ளை என்ற சொல்லாடல் மூலம் வெளிப்படுத்தினார்.
அவரது ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தமும் தனிச் சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கும் நாடு முகம் கொடுத்தது. இப்படியான ஒரு சூழ் நிலை வெளி நாடுகளின் சதி வேலைகளுக்கு மிகவும் சிறந்த தருணத்தை ஏற்படுத்தின. உலக வல்லரசுகளின் இராஜீய நடை முறையில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு துருப்புச் சீட்டும் உள்ளது. இது முக்கியமாக இரண்டாவது உலகப் போரின் பின்னர் உலகம் ரஷியாவின் தலைமையிலும் அமெரிக்காவின் தலைமையிலும் கிழக்கு மேற்காக அணி வகுத்து நின்ற போது நடைமுறைக்கு வந்தது.
அமெரிக்காவும் ரஷியாவும் உலக ஆதிக்கப் போட்டியில் சிறிய நாடுகளை தம் வசப்படுத்தும் போரில் ஈடுபட்டன. இதன் படி தமக்குத் தேவையான நாட்டின் ஆட்சி பீடத்தைத் தமக்குள் வளைத்துப் போடுவதற்குச் சாம, பேத, தான, தண்டம் என்ற வழி முறையில் செயற்படுத்துவர். தண்டம் என்பது ஆட்சியில் உள்ள ஆளைப் போட்டுத் தள்ளுவது. இதனையே பனிப் போர் என வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுவர்.
இந்தப் பனிப் போரில் இலங்கையில் முதல் பலியாக விழுந்தவர் பண்டார நாயக்கா ஆவர். பேருக்கு நிதி விசாரணை நடத்தி சோமராம தேரோ என்ற பிக்குவும் மரண தண்டனை பெற்றுத் தூக்கில் இடப்பட்டார். அந்த வழக்கில் ஸ்ரீ மாவோ பண்டார நாயக்க எந்த வித விசாரணையும் இல்லாது விடப்பட்டார் என்பது இந்த வழக்கின் ஒரு சிறப்பு. இன்னொரு சிறப்பு முக்கிய சந்தேக நபராகப் பேசப்பட்ட இரவு விடுதி சொந்தக்காரரான ஒசி கொரேயா என்பவர் எதுவித தண்டனையும் இல்லாது தப்பித்துக் கொண்டார். இவருக்கு அமெரிக்கப் பின்புல ஆதரவு இருந்தது எனப் பலமாகப் பேசப்பட்டது. எனவே பண்டார நாயக்கா ஒரு வெளி நாட்டுச் சதியால் இலங்கையில் விழுந்த முதல் பலி என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது.
1959ல் பண்டார நாயக்கா தலை உருண்டு இன்று 51 ஆண்டுகள் போய் விட்டன. இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் அதன் அதிபர் கென்னடி ,பாக்கிஸ்தான் ஷியாவுல் ஹக், வங்கத்தில் முஜிபுர் றஃமான், இந்தியாவில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, இலங்கையில் பிரேமதாசா எனப் பல அரசியல் கொலைகளை உலகம் கண்டு விட்டது. ஷியாவுல் ஹக் சென்ற விமானம் வானில் வெடித்துச் சிதறியது. ஆயினும் அதில் வெளிநாடு ஒன்றின் கரங்கள் இருக்கக் கூடிய சாத்தியப்பாடு அதிகம் உள்ளது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவரது கொலைகளும் முழுமையான பக்கச் சார்பற்ற விசாரணைகளுக்கு உட்பட வில்லை என்பதும் இரண்டிலுமே வெளிநாடுகளின் கை இருக்கப் பலமான காரணங்களும் நிறையவே உண்டு. அரசியல் கொலைகளில் ஒரு சிறப்பு அதன் விசாரணை நேர்மையாக இடம் பெறாது. முக்கிய சந்தேக நபர் பகிரங்கமாகவே கென்னடி கொலையில் நடந்தது போன்று இன்னொருவர் அப்பாவி போல் சந்தேக நபரைக் கொன்று விசாரணைக்கு முற்றுப் புள்ளி போட்டு விடுவார். அல்லது இந்திரா காந்தி ராஜீவ் காந்தி கொலைகளில் நடந்தது போன்று விசாரணை வேண்டும் என்றே திசை திருப்பப்பட்டு உண்மைகள் மறைக்கப்பட்டு விடும்.
ஆனால் இக்கொலைகள் எதிர்பார்த்த அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தத் தவறுவதில்லை. ராஜீவ் காந்தி கொலையால் நேரடிப் பயனாக இலங்கை அரசு இந்தியாவைத் தன் பக்கம் இழுக்க முடிந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலக அரங்கில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடவும் அரசு நோக்கிய தமிழீழத் தனி அரசின் தலைவராக விளங்கிய பிரபாகரனின் தலையை சிங்களம் எடுக்கவும் வகை செய்தது.
இலங்கையில் கடைசியாக இடம் பெற்ற ஆட்சி மாற்ற வேலைத் திட்டத்தால் பிரபாகரனும் அவருக்கு மாற்றீடாக வரக் கூடிய தமிழர் தலைமைகளும் இல்லாமல் செய்யப்பட்டு விட்டன. இதில் இந்தியா அமெரிக்கா சீனா முழுமனதோடு ஈடுபட்டதற்கான ஏது நிலைகள் நிறையவே காணப்படுகின்றன. இந்தியாவின் விருப்பம் யாவருக்கும் தெரிந்ததே. ஆனால் அமெரிக்கா எமது நண்பன் இல்லை என்பதற்கு 2008ல் அமெரிக்க வெளி விவகாரத் துறையின் வேலைத் திட்டம் ஒன்றில் இலங்கையில் இரண்டு அதிகார மையம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஓன்றை இல்லாது ஒழிக்க வேண்டும். அதை நாம் செய்யாது நட்பு நாடுகளைக் கொண்டு செய்து முடிக்க வேண்டும். திருகோணமலைத் துறைமுகம் முக்கியமானது அதற்குத் தடையாக விடுதலைப் புலிகள் உள்ளனர் எனவும் கூறப்பட்டிருந்தது.
அமெரிக்கா பாகிஸ்தான் மூலமாக ஆயுதம் வழங்கியும் இந்தியாவையும் இலங்கையையும் ஊக்குவித்ததோடு 7 நாடுகளின் இராணுவ ஆலோசகர்களில் ஒருவராக வன்னிப் போர் முனையில் இலங்கைப் படைகளுக்கு உதவி அளித்தும் தமிழின அழிப்புக்கு உதவி ஒத்தாசை வழங்கியது. எனவேதான் இன அழிப்பு என்ற குற்றுச்சாட்டை முன்னிறுத்தக் கூடாது எனத் தமிழர் தரப்புக்கு அமெரிக்கா அன்புக்(?) கட்டளை போடுகிறது.
இன்றைய நடைமுறையில் எந்த நாடும் இன்னொரு நாட்டின் மீது தனித்துப் போர் தொடுக்கும் நிலை இல்லை. ஈராக்கிலும் ஆப்கானிலும் அமெரிக்கா போர் தொடக்கிய போதும் தனது போரை நியாயப்படுத்த பிற நாடுகளை அணி சேர்த்தே நடத்தி வருகிறது. ஈராக்கில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வலிந்து பல பொய்களையும் பிரித்தானியப் பிரதமர் ரோனி பிளேயருக்கு இலஞ்சம் கொடுத்தும் அமெரிக்கா போரைத் தொடக்கியது.
அதன் முட்டாள் தனத்தால் தனது படைகளையும் பெரும் பணச் செலவையும் இழந்து அவமானப்பட்டுக் கிடக்கிறது. ஈராக்கிலும் ஆப்கானிலும் ஒரே நேரத்தில் போர் நடக்த வேண்டிய நி;ர்ப்பந்தம் அமெரிக்காவை இன்று ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்குத் தள்ளி விட்டது. இந்தப் போர்களால் சீனாவிடமே பெருந் தொகைக்குக் கடனாளியாகி விட்ட நிலையில் இலங்கை விடையத்தில் இந்தியாவோடு சேர்ந்து தானும் அணில் ஏற விட்ட நாய் போல ஏமாந்து நிற்கிறது.
இலங்கை இப்போது சீனாவின் செல்லப் பிள்ளையாகத் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டது. இன்றைய உலகில் போர் மூலம் வர்த்தக பொருளாதார நலன்களைப் பெறுவது முடியாத படிக்கு உலகில் பல நாடுகளும் அணு ஆயுதப் போட்டியில் இறங்கியும் ஏனைய போர்த் தளபாடங்களை பெற்றும் பலம் பெற்றுள்ளன. லெபனான் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தால் இஸ்ரவேல் மூக்குடைபட்டு நிற்பதும் ஈராக் ஆப்கானில் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளும் மூச்சு விடத் தவிப்பதும் உலகில் போர் என்பது கவைக்குதவாத பொருளாகி விட்டதையே காட்டுகிறது.
ஆனாலும் நாடுகளுக்குள் மோதல் ஏற்படும் காரணிகள் ஏராளம். அதுவும் இலங்கையைப் பொறுத்த வரை அதன் கேந்திர முக்கியத்துவம் சீனாவின் வளர்ச்சியால் பெருமளவு அதிகரித்து விட்டது. சீனாவின் வல்லரசுக் கனவு உறுதியாகி விட்ட அளவுக்கு அதன் பொருண்மிய இராணுவ பலம் உலகின் முதல் தரத்துக்கு ஏறிவிட்டது எனலாம்.
இதேவேளையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவால் சீனாவின் பலத்தைச் சகித்துக் கொள்ளவும் முடியாது. ஆதே வேளை இந்தியாவின் எல்லைகளை பல முறை கபளீகரம் செய்து வரும் சீனாவை இந்தியாவால் எதுவும் செய்ய முடியாத நிலை. இலங்கையை முழமையாகச் சீனாவிடம் விட்டுவிட இந்தியாவோ அமெரிக்காவோ தயாராக இல்லை.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கட்டுக் கடங்காது திமிறி நின்ற மகிந்தரை விழுத்திவிட்டு அமெரிக்கக் குடியுரிமை கொண்டுள்ள சரத் பொன்சேகா மூலம் தமது ஆசையை அடைய இந்தியாவும் அமெரிக்காவும் போட்ட திட்டம் மகிந்தரின் சாதுரியத்தால் தவிடு பொடி ஆக்கப்பட்டு அவர் முன்னரிலும் அதிக பலமும் வளமும் பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறி விட்டார். முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இருந்த அதே மரணச் சனி இப்போ எங்கே போயிருக்கிறது என்பதை வாசகர் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. உலகச் சதுரங்கப் போட்டியில் அடுத்த தலை விரைவில்.
- த.எதிர்மன்ன சிங்கம் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக