ஈழத்தில் இனப்படுகொலை தலைவிரித்து நடமாடிக்கொண்டு பல அப்பாவி மக்களின் உயிர்களை ஏன் கொன்று குவிக்கிறது என்று மலேசியா அரசாங்கம் சீறிப்பாய்ந்ததுண்டா? எங்கே சென்றது மலேசியா அரசாங்கத்தின் மனிதான்மை? இவ்வாறு மலேசியா மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினர்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தை சார்ந்தவர்களுக்கும் இடையில் நடக்கும் போர் ஒரு உள்நாட்டு பிரச்னை என்று கருதுவதால் நேரடியாக தலையிட முடியாத சாத்தியம் உண்டு என்பதனை வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கோகிலான் பிள்ளை நாடாளுமன்றத்தில் கூறினார்.
அதனை தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி, சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் பலர் அந்நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு தஞ்சம் செல்வதும் மற்றும் இருதரப்பினருக்கும் நடைபெறும் கலவரம், உள்நாட்டு பிரச்சனை என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது ஒரு காட்சிகோணம். ஆனால் அதே கோணத்தில் ஏன் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் தரப்பினருக்கும் நடந்த கலவரத்தை உள்நாட்டு சர்ச்சையாக பார்க்கவில்லை நமது நாட்டு அரசாங்கம்?.
மேலும் மியன்மார் நாட்டில் நடைபெறும் ஜனநாயக உரிமை அபகரிப்பை பற்றி நம் நாட்டு அரசாங்கத்தின் கருத்து என்ன? அதுவும் உள்நாட்டு பிரச்சனை என்று கருதப்படுகிறதா? இறுமாப்பு கொள்கையை நமது நாடு கொண்டிருக்கும் வேளையில் உண்மைக்கு புறம்பாக செயல்படுத்தப்படும் கொள்கைக்கு எதிராக கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் சூழ்நிலை தான் ஏற்படும்.
பல லட்சம் ஈழத் தமிழர்கள் கொன்றதை மனிதாபிமான அடிப்படையில் பார்க்கவேண்டும். மேலும் இனப்படுகொலை என்பது அனைத்துலக பிரச்சனையாக கருதப்படும் வேளையில் மலேசியா அரசாங்கம் மட்டும் உள்நாட்டு பிரச்சனையாக கருதுவது ஏற்க முடியாது ஒன்று என்று முனைவர் இராமசாமி கூறினார்.
அதனைத் தொடர்ந்து அரசாங்கம் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியதாக கூறப்பட்ட விவகாரத்திற்கு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் பல கேள்விகளை எழுப்பினார்.
அரசாங்கம் வழங்கியதாக கூறப்பட்ட பணம் யாருக்கு வழங்கப்பட்டது, எவ்வகையில் வழங்கப்பட்டது மற்றும் எப்பொழுது வழங்கப்பட்டது என்று கேள்வி கேட்டார். அதனை ஈழத்தமிழர்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டதா அல்லது இலங்கை அரசாங்கத்திற்கு இனப்படுகொலையை ஊக்குவிக்கும் வகையில் இப்பணம் வழங்கப்பட்டதா என்று சந்தேகம் இருப்பதாக குலசேகரன் கூறினார்.
அதே சமயத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து சுமார் ஐந்து இலட்சம் வெள்ளி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வழங்கப்பட்ட தகவல் உள்ளது. ஆகையால் மலேசியா அரசாங்கம் வழங்கிய அமெரிக்க வெள்ளி ஒரு இலட்சம் தவறான தரப்பினருக்கு வழங்கப்படுள்ளது என்று அவர் கூறினார்.
மு.குலசேகரனின் கருத்து.
ஈழத்தில் இனப்படுகொலை தலைவிரித்து நடமாடிக்கொண்டு பல அப்பாவி மக்களின் உயிர்களை ஏன் கொன்று குவிக்கிறது என்று மலேசியா அரசாங்கம் சீறிப்பாய்ந்ததுண்டா?
கடந்த 53 வருடங்களில் ஒரு முறையாவது இலங்கை அரசாங்கத்தின் அராஜக செயலுக்கு மலேசியா நாடாளுமன்றம் அவசரமாக கூடி தீர்மானங்கள் ஏதேனும் கொண்டு வந்ததுண்டா?
ஏன் இல்லை? வெளியுறவு துணை அமைச்சர் கோகிலான் பிள்ளை நாடாளுமன்றத்தில் சொன்னது போல இதுதான் நமது அரசாங்கத்தின் “ஆக்கபூர்வமான ஈடுபாட்டுக்” கொள்கையா?
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற உலக தமிழர்களின் குரல் நமது மலேசியா அரசாங்கத்தின் செவிக்கு எட்டவில்லை. ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்குகிறார்களாம்.
யாருக்காக இந்த பணம் வழங்கப்பட்டது? இலங்கை அரசாங்கம் இந்த பணத்தை மலேசியா அரசாங்கத்திடம் கேட்டதா? அப்படி கேட்டால், எதற்கு குண்டு மழை வீசி தொண்டு செய்ய முயல்கிறீர்கள் என்று இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி கேட்கவில்லை நமது அரசாங்கம்?
மதிகெட்ட இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சக செயலுக்கு எதற்காக நிதி வழங்கப்பட்டது? அது ஈழத் தமிழர்களுக்கு நேரடியாக வழங்கி இருக்கலாமே?
ஈழத் தமிழர்களின் நீதிக்கு மலேசிய அரசாங்கம் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளது. அப்பாவி ஜனங்களின் உயிர்களை போர் என்ற வார்த்தையால் கொன்று அள்ளி குவிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு பணம் வழங்கிய மலேசியா அரசாங்கத்தின் கொள்கையை “அதிநாச தூண்டுதல்” கொள்கை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவ மலேசியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து கலந்து பேச ஏதேனும் முயற்சிகள் எடுத்ததா? இல்லை என்றால் ஏன் அப்படி செய்யவில்லை?
பணம் வழங்கிய பொழுது நன்றி கூறிய இலங்கை அரசாங்கத்திடம் மலேசியா ஏன் எந்த ஒரு நிபந்தனையும் முன்னிறுத்தவில்லை?
தடுப்பு முகாம்களிலுள்ள தமிழரின் நிலையை மலேசியா அரசாங்கம் என்றாவது ஒரு நாள் நினைத்து பார்த்ததுண்டா?
மேலும் இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் அவல நிலையை பற்றிய அதன் நிலைப்பாட்டையும் மனித உரிமை மீறல் தொடர்பான செயலையும் கண்டிக்கும் வகையில் வலியுறுத்தப்படும் அறிக்கைகள் ஏதேனும் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டதா?
இவை அனைத்தையும் செய்யாத மலேசியா அரசாங்கம், இன அடிப்படையில் நாடாளுமன்றத்தில் அவரச கூட்டம் கூட்டுவதும், மகஜர் சமர்பிப்பதும், ஆட்சேபம் எழுப்புவதும் எந்த விதத்தில் நியாயமாகும்?
உலகில் வாழும் அனைத்து மனித குலத்திற்கும் மனிதாபிமான அடிப்படையில் குரல் எழுப்புவது தான் ஒரு சிறந்த ஜனநாயக அரசாங்கத்தின் கடமை. இலங்கையில் இனவெறிக்கு ஆளாகும் அப்பாவி தமிழர்கள் அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது மலேசியா ஏன் என்று கூட கேட்கவில்லை. அதுதான் உண்மை.
ஆகவே இனி வருங்காலங்களில் ஈழத்தமிழருக்கு உதவி நிதி வழங்க அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கலந்து பேசிய பிறகு தான் அவை வழங்கப்பட வேண்டும் என்பதனை மலேசியா அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறேன். அப்பொழுது தான் அவை முறையாக பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு சென்றடையும்.
நன்றி.
மு.குலசேகரன்
ஈழப்போராட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மலேசியா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக