பிரச்சனை தமிழருக்கல்ல சிங்களவருக்கே என்ற நிதர்சனத்தை புரிய வைக்க முடியுமா ?
இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்ற நீண்ட உரையாடல் நேற்று முன்தினம் அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளின்டன் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகு ஆகிய இருவரும் சுமார் ஏழு மணி நேரம் தொடர்ந்து உரையாடினார்கள். அந்த உரையாடலில் பாலஸ்தீன நாடு அமைந்தால் அதனால் ஏற்படக்கூடிய எழுச்சி இஸ்ரேல் என்கிற நாட்டை அழிக்கும் விசையாகிவிடக் கூடாது இஸ்ரேலின் அச்சம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. இஸ்ரேல் என்னும் நாட்டையும் அதன் ஸ்திரத்தன்மையையும் முழுமையாகப் பாதுகாப்போம் என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா தரும்பட்சத்தில் விட்டுக் கொடுப்புக்களோடு பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் – பாலஸ்தீனர்களை பேச்சு வார்த்தை மேசைக்கு அழைக்கலாம் என்ற புதிய எண்ணமும் அங்கு முன் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கிளரி கிளின்டன் முன் வைத்துள்ள மேற்கண்ட யோசனை இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் மிக முக்கியமானதாகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் பராக் ஒபாமாவின் அணி படுதோல்வியடைந்தது தெரிந்ததே. வரும் இரண்டாண்டுகளில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற வேண்டுமானால் இரண்டு ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனை ஒரு முக்கிய முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால் இஸ்ரேலை மனம் மாற்றம் செய்து ஓர் அமைதியை எட்ட முடியாது என்பது இப்போது முற்றிலும் தெளிவாகிவிட்டது.
தான் பதவி விலக முன்னர் இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சனையை முடித்துவிட்டு விலகலாம் என்ற ஜோர்ஜ் புஸ் கனவு தோல்வியடைய முக்கிய காரணம் அமெரிக்காவின் உத்தரவாதம் இஸ்ரேலுக்கு தெளிவாகக் கிடைக்காமையே. இந்த நிலையில் உத்தரவாதம் வழங்குவதன் மூலம் பிரச்சனையை புதிய தளத்திற்கு கொண்டு செல்லாம் என்று இப்போது அமெரிக்கா நினைக்கிறது. இது அண்மைக்காலமாக நடைபெறும் பேச்சுவார்த்தை மொடல்களில் புதுமையானதாக இருக்கிறது.
பாலஸ்தீனத்திலும், சிறீலங்காவிலும் நோர்வே எடுத்த தீர்வுத்திட்ட வடிவங்கள் படுதோல்வியடைந்த வடிவங்களாகவே இதுவரை இருந்து வந்தன. அந்த வீழ்ச்சியான வடிவமைப்பிற்கு தற்போது முன் மொழியப்பட்டுள்ள கிளரி கிளின்டனின் உத்தரவாதமளிக்கும் தீர்வுத்திட்டம் ஒரு புதிய முகத்தைத் தரக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன் யாகு பாலஸ்தீனர்களின் நிலத்தில் இஸ்ரேலியர்களுக்கான குடியிருப்புக்களைக் கட்டி அடிப்படைப்படைப் பிரச்சனையை திசைதிருப்புவதில் கைதேர்ந்த கில்லாடியாக இருந்து வருகிறார். இஸ்ரேலின் அச்சம் பெருகும்போதெல்லாம் பாலஸ்தீன பகுதியில் குடியிருப்பு அமைப்பதை ஒரு தந்திரமாகவே செய்தும் வருகிறார். இந்தநிலையில் இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியாத அமெரிக்கா வீடுகளை கட்டாதீர்கள், வீண் குடியேற்றம் செய்ய வேண்டாம், நாம் உங்கள் நாட்டின் முழுமையான பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் தருகிறோம் என்ற இடத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவை வீழ்த்த இஸ்ரேல் போட்ட நாடகம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாகவே கருத வேண்டும்.
இதேபோல ஒரு தந்திரத்தையே சிறீலங்காவும் கடைப்பிடிக்கிறது. இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியில் வீடுகளை அமைப்பதுபோல சிங்கள மக்களை மறைமுகமாக தூண்டிவிட்டு யாழ்ப்பாணத்தில் வீடமைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது. ஆக எல்லாவிதமான பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு வீடுகளும், அத்துமீறிய குடியேற்றங்களும் நடக்கின்றன என்ற இடத்திற்கு கவனத்தை திசை திருப்பியுள்ளது.
எங்கள் ஆட்சிக்கு பாதுகாப்பைத் தேட பகடைக்காயாக்க ஈழத்தமிழர்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் என்பது சிறீலங்காவின் வியூகமாக இருக்கிறது.
வடக்கே இந்தியாவின் வீடுகளை அமைக்க முன்னர் சிறீலங்காவின் சிங்களக் குடியேற்ற வீடுகள் வருவதன் பின்னணி இதற்குள் இருக்கிறது..
பொருத்தமான உத்தரவாதமில்லாமல் இந்திய முதலீடுகளும், சீரானவாழ்வும் வடக்கில் மலர்ந்துவிட்டால் அது தமக்கு ஆபத்தென சிறீலங்கா நினைப்பதே தற்போதய இழுபறிகளின் காரணம் என்றும் உணர முடிகிறது.
சிங்களக் குடியேற்றங்களை கொண்டுவந்து அவர்களை பாதுகாக்க அருகில் இராணுவ முகாம் வைத்து வடக்கை பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்க சிறீலங்கா முயல்கிறது.
இந்தக் கோணத்தில் இனப்பிரச்சனையை சீர் தூக்கினால் பிரச்சனை தமிழர்களுக்கல்ல சிங்களவருக்கே என்பதை எளிதாக உணரலாம்.
சிறீலங்கா சீனா பக்கம் போவது போலவும் இந்தியா பக்கம் போவது போலவும் தடுமாறுவது தமிழரின் பிரச்சனைக்காக அல்ல சிறீலங்காவின் பாதுகாப்பிற்காக என்பது தெளிவான உண்மையாகும்.
இந்தியாவும், சீனாவும் இணைந்து சிறீலங்காவின் சிங்கள – பௌத்த ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு உறுதியான உத்தரவாதமளித்தால் இஸ்ரேலைப்போல தாமும் தமிழருடன் பேசப்போகலாம் என்ற கருத்தை மறைமுகமாக சிறீலங்காவும் முன் வைக்கலாம்.
அமெரிக்கா போல வெளிப்படையான உத்தரவாதத்தை இந்தியாவும், சீனாவும் சிறீலங்காவிற்கு வழங்குவதால் அவைகள் அடையப்போகும் இலாபம் என்ன ?
இந்தக் கேள்விக்கான பதில் சிறீலங்காவிடம் என்றுமே இருந்தது கிடையாது. அந்தப் பதிலை தயாரிக்கக்கூடிய ஞானமும் பிரச்சனைத் தீர்வை மறுபக்கமாக புரட்டிப் போடும் அறிவியல் வல்லமையும் இனிமேலாவது தமிழர் தரப்பிற்கு வந்தாக வேண்டும். தமிழரின் நலவாழ்வையும், குடியேற்றங்களையும், இன்பிரச்சனைத் தீர்வையும் சிங்களவருடன் பேசுவது அரதப் பழைய முறை என்பதை பழம் பெரும் தமிழ் தலைவர்கள் புரிய வேண்டும். நவீன உலகத்தை வாசித்து கூடவே கொஞ்சம் சுயமாக யோசிக்கவும் வேண்டும். அமெரிக்கா வைத்துள்ள புதிய யோசனையை சற்று நாமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியருக்கும், சிங்களவருக்கும், சீனருக்கும் உள்ள பிரச்சனைக்குள் வீணாக நாம் சிக்குப்பட்டு அழிகிறோம் என்று எண்ணி பிரச்சனையின் திசை திருப்ப வேண்டும். முடியுமா முடியாவிட்டால் அமெரிக்க – இஸ்ரேல் ஏழு மணி நேர பேச்சுக்களின் உட்கட்டுமானத்தை படித்துப் பார்ப்பது நலம் தரும்.
- அலைகள் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக