இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி திருப்திகரமாக இல்லை என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறினார். இலங்கை முன்னாள் பிரதமரும், தற்போதைய இலங்கை எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உங்கள் சென்னை பயணத்தின் நோக்கம்?
சொந்த விஷயமாக வந்துள்ளேன். இன்று ஒரு நாள் இங்கு தங்குகிறேன். அப்போது, சிலரை சந்தித்து பேச உள்ளேன்.
இலங்கையில் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணி எந்த அளவுக்கு நடக்கிறது?
அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. நேற்று கூட நானும், இலங்கை தமிழ் எம்பி சம்பந்தமும் இது சம்பந்தமாக கலந்து பேசினோம்.
அடுத்த வாரம் மீண்டும் பேசுகிறோம். அதன் பின்பு இலங்கை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்ப இருக்கிறோம். இலங்கையில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை.
ராஜபக்சேவின் செயல்பாடுகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
ராஜபக்சே தன்னிச்சையாக செயல்படுகிறார். எந்த பிரச்னை என்றாலும் தன்னுடைய ஆதரவாளர்களை மட்டுமே கலந்து பேசுகிறார். நாட்டின் பொதுப் பிரச்னைகளில் எதிர்கட்சிகளை கலந்து பேச வேண்டும் என்ற மரபு உள்ளது. ஆனால், ராஜபக்சே அந்த மரபுகளை மீறி செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளாகிய எங்களை மதிப்பது இல்லை. எந்த தகவலையும் சொல்வதும் இல்லை. இவ்வாறு ரனில் விக்ரமசிங்கே கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக