வியாழன், 4 நவம்பர், 2010

இலங்கையின் புதிய நிபந்தனைகளால் பணிகளை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இந்தியா மீளாய்வு.

போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் இந்தியா முன்னெடுத்து வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்துள்ளன. புதுடில்லியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனாலேயே அவை தேக்கத்தை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணம் இழுபறி நிலையை அடைந்துள்ளதாகப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

   விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியா அவசர உதவிகளை வழங்கியது. குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு 500 கோடி இந்திய ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்ட உதவிகளையும் புதுடில்லி அறிவித்தது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களையும் விரைவாகச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது இந்தத் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்துள்ளன என புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்தியா அமைத்துக் கொடுக்கும் என அறிவித்த 50,000 வீட்டுத் திட்டம், வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புத் திட்டம், சம்பூர் மின் நிலையத் திட்டம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம், பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் என்பன தற்போது தேக்க நிலையை எட்டி உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

   இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும் இப்போது இலங்கை அரசு புதிதாக நிபந்தனைகளை விதிக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்தத் திட்டங்களை இந்திய அரசு தானே முன்னெடுக்க இருந்தது. ஆனால் இரு நாடுகளும் இந்தத் திட்டங்களில் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்று இப்போது இலங்கை அரசு புதிய நிபந்தனைகளை விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

   திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்தல், வேலையாள்களைத் தெரிவு செய்தல், மூலப் பொருள் கொள்வனவுகள், திட்டப் பயனாளிகளைத் தெரிவு செய்தல் போன்றவற்றில் தானே முடிவுகளை எடுக்க வேண்டும் எனக் கொழும்பு இப்போது வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது.

   இதனால் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையைத் தொடர்ந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சீனா முன்னெடுக்கும் இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்களில் இவ்வாறான விடயங்களில் சுதந்திரமாகச் செயற்பட அதனால் முடிகின்றது என்று புதுடில்லி வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், நுரைச்சோலை அனல் மின் நிலையத் திட்டம், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கான வீடமைப்புத் திட்டம் போன்றவற்றில் சீனத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும், சீன நிறுவனங்களின் இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதித்துள்ள இலங்கை அரசு அதேபோன்ற வசதிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்குப் பின்னடிப்பதாக புதுடில்லி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கையின் நிபந்தனைகளை அடுத்து தனது அபிவிருத்திப் பணிகளை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இந்தியா மீளாய்வு செய்து வருவதாகவும் தெரிகிறது. இதனாலேயே இந்த மாதம் வருகை தர இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணம் பிற்போடப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

   அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணம் அடுத்த மாதப் பிற்பகுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவு ஒன்று காணப்படாத நிலையில் அந்தப் பயணம் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக