யாழ். தொடருந்து நிலையத்தில் தரித்திருந்த சிங்களவர்கள் இரவோடு இரவாக நாவற்குழிப்பகுதியில் அத்துமீறிக் குடியமர்ந்தனர்.
தொடருந்து நிலையத்தில் தரித்திருந்த இருந்த சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கம்புகள், தடிகள் சகிதம் வீடமைப்பு அதிகார சபைக் காணிகளுக்குள் நுழைந்து கொட்டில்களை அமைக்க ஆரம்பித்தனர். கொட்டில்கள் அமைக்கும் பணியில் அவர்கள் முழு நாளும் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் வீடுகளை அமைப்பதற்கு சீருடையினரும் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியதை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக யாழ் அரச அதிபரிடம் கேட்ட போது சிங்கள மக்களின் இந்த குடியேற்றம் குறித்துத் தனக்கு எதுவுமே தெரியாது என யாழ். அரச அதிபர் தெரிவித்தார்.
அங்கு குடிசைகளை மும்மரமாக அமைத்துக்கொண்டிருந்த ஒரு சிங்களக் குடும்பத்தினரிடம் எமது செய்தியாளர் யாரின் அனுமதியுடன் குடிசைகளை அமைக்கிறீர்கள் என்று கேட்டபோது ‘மீளக் குடியேற்றுமாறு கேட்டு நாம் யாழ்ப்பாணம் வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டபோதும் அதிகாரிகள் எம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
வேறு வழியில்லாததால் இந்தக் காணிகளில் கொட்டில்களை அமைத்துக் குடியேறத் தீர்மானித்தோம்” – தமது ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கம்புகள், தடிகளைக் கொண்டே கொட்டில்களைத் தாம் அமைக்கின்றனர் என்று அவர் கூறினார். ‘எமக்கு யாரும் இதுவரை உதவி செய்யவில்லை. யார் என்ன சொன்னாலும், தடுத்தாலும் நாம் இங்குதான் குடியேறுவோம்” – என்றார் இன்னொருவர்.
ஆனால் நேற்று முன்தினமே அப்பகுதியில் ஆயிரக்கணக்கான கம்புகள், தடிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதிக் கிராம அலுவலர் ஆ.நடராஜா தெரிவிக்கையில் நேற்றுமுன்தினம் இரவு முதலே அப்பகுதியில் வாகனங்களின் இரைச்சல் கேட்ட வண்ணம் இருந்தது.
விடிந்த பின்னர் அங்கு சென்று பார்த்த போது ஏராளமான தடிகள் பறிக்கப்பட்டிருந்தன. பல சிங்கள மக்கள் அங்கு நின்றதை அவதானிக்க முடிந்தது.
அவர்கள் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்துக் கொண்டிருந்தனர். உடனடியாகவே இது குறித்து யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கும் சாவகச்சேரி பிரதேச செயலர் சாந்தசீலன் அஞ்சலிதேவிக்கும் அறிவித்தேன் என்றார்.
சிங்கள மக்களின் நடவடிக்கை குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:-
எமது அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் கொட்டில்கள் அமைத்துக் குடியேறுவதற்கு முயற்சிப்பதை அறிந்து, நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தேன்.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள் எந்தவித அனுமதியும் பெறாது அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றனர். இது குறித்து சபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு உடனடியாகத் தகவல் அனுப்பினேன்.
நாவற்குழியில் அதிகார சபைக்குச் சொந்தமான 90 ஏக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத் திட்டத்திற்கு என வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 60 ஏக்கர் காணியை அதிகார சபை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறது.
சிங்கள மக்கள் அந்தக் காணியில் குடியேறுவதற்கு முயற்சிப்பது குறித்து வீடமைப்பு அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன் – என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக