ஞாயிறு, 12 டிசம்பர், 2010

பார்க்க வேண்டிய திரைப்படம் Apocalpto – இ. மகேசன்


எல்லாவற்றையும் அழித்த எதிரியோடு இணைந்து வாழ்வோம் என்று கூறும் பேடிகள் நிறைந்த உலகில் ஒரு வீரனைப்பார்த்த மகிழ்வையும் நம்பிக்கையையும் தருகிறது திரைக்காவியம்.
திரைப்படங்களில் வன்முறையைக் காட்டுவதிலும் ஒரு வரையறை இருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் வெளியாகியுள்ள இரத்தசரித்திரா என்ற திரைப்படம் கொடுமையான வன்முறைகள் காரணமாக மக்களை திரையரங்கை விட்டே ஓட வைக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடுமையான வன்முறைகள், கொலைகள், சித்திரவதைக் காட்சிகளுக்காக உலகளாவிய ரீதியில் பெரும் வாதப்பிரதிவாதங்களை சந்தத்த திரைப்படமே Apocalpto என்ற திரைப்படமாகும். ஆனால் இரத்தசரித்திரா போல திரையை விட்டு ஓடாது வசூலில் பெரு வெற்றிபெற்று மக்களின் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக மிளிரும் Apocalpto பற்றியே இக்கட்டுரை பேசுகிறது. வன்முறை திரைப்படங்களில் செயற்கையாக இடம் பெறக்கூடாது அவை இயல்போது இணைந்து வந்தால் அதை ரசிகரால் தாங்க முடியும் என்ற தகவலும் திரைப்படத்தில் உள்ளது.
Rudy Young Blood என்கின்ற 24 வயது நிரம்பிய கதை நாயகன் அமெரிக்காவில் உயர் கல்வியை நிறைவு செய்து விட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறான். அங்கு வரும்வரைக்கும் அந்தக் கதைக்கு தான்தான் நாயகன் என்பது அவனுக்கு தெரியவே தெரியாது. படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான Melgipson அந்தத் தகவலைக் கூறியபோது பல நிமிடங்கள் அவரையே கூர்ந்து பார்த்தபடி நின்றான்.

அதைத் தொடர்ந்து நடிகர்களுக்கு திரைப்படத்தில் வரும் மாயா எனப்படும் மொழிக்கான பயிற்சிகள் ஆரம்பமாகியது. Patriot, Breve Hjert போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய மெல் கிப்ரனின் பிரச்சனைக்குரிய படமான The Passinn of the crist படத்திற்குப் பின்னர் அவருடைய இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றியும் பெற்ற படம்தான் யுpழஉயடpவழ. பல ஆயிரம் மனிதர்களை வைத்து உருவாக்கிய பிரமாண்டமான திரைச்சித்திரம்.
கதை நடந்த காலம் 1600 களின் ஆரம்பப் பகுதியாகும். மத்திய அமெரிக்காவின் அடர்ந்த காட்டுப்பகுதி, தங்கள் இனத்தின் அடையாளங்களுடன் வேட்டையாடுதல், ஆடல், பாடல் என அமைதியாக வாழும் ஓர் இனத்தின் மீது ஆக்கிரமிப்பு சக்திகளால் அதிகாலையில் தாக்குதல் தொடங்கப்படுகிறது.
அந்த அதிகாலை வேளையில் கெட்ட கனவு கண்டு விழிக்கும் ஜாக்குவார் பவ், நிறைமாதத்தினை நெருங்கிய தன் மனைவி, மகன் இருவரையும் பாதுகாப்பிற்காக கிணறு போன்று தோற்றமளிக்கும் குழி ஒன்றினுள் இறக்கி விடுகிறான்.

மனைவி பிள்ளைகளை குழிக்குள் விடும்போது நிச்சயம் தான் வந்து மீட்பேன் என்று கூறிவிட்டு எதிரிகளுடன் மோதப்புறப்படுகிறான். அங்கு நடக்கும் பெரும் யுத்தத்தில் அவன் எதிரிகளால் சிறை பிடிக்கப்படுகிறான். அவன் கண் முன்னாலேயே அவன் தகப்பன் கழுத்து வெட்டி கொல்லப்படுகிறான்.
கொல்லப்படும் வேளையில் அவன் சொல்லும் வசனம் , இறக்கும் இறுதிக்கணத்திலும் பயம் என்பது உனக்கு வரவே கூடாது , என்பதுதான். பயமே உன்னை இறக்க வைக்கும்! பயம் துற ! அதுவே உன்னை வாழ வைக்கும் ! என்ற அற்புதமான வரிகளுடன் மரணிக்கிறான்.
வன்னிப் பெருநிலப்பரப்பு சிங்கள இனவாதப் படைகளால் அழித்தொழிக்கப்பட்டது போல அவர்களின் வாழ்விடங்கள் முற்றிலுமாக அழித்தொழித்து எரிக்கப்பட்டு, ஜாக்குவார் பவ்வும் அவன் தோழர்களும் கைதாகி, ஒரு கோயிலுக்குப் பலியிடுவதற்காக கொண்டு செல்லப்படுகிறார்கள்.
நீண்ட காட்டுப் பயணம், மிக மோசமான ஈவு இரக்கமற்ற எதிரி பயணம் தொடர்கிறது. பலியிடம் வந்தபோது அங்கே அவனுடைய நண்பர்கள் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள். அந்த நேரம் தகப்பன் சொன்ன இறுதிக் கணத்திலும் பயம் கொள்ளாதே என்ற வாசகங்களே அவனைக் காப்பாற்றுகிறது. எதிரிகளிடமிருந்து தப்பி தான் வாழ்ந்த, தான் வேட்டையாடிய பிரதேசத்திற்குள் வருகிறான். எனது தேசத்திற்குள் வந்துவிட்டீர்கள் இனி உங்களுக்கு தோல்விதான் என்கிறான்.

மிகுந்த விறுவிறுப்புடன் திரைப்படம் நகர ஆரம்பிக்கிறது. மழை பெரிதாக பொழிந்து தள்ளுகிறது. மனைவி பிள்ளைகள் மறைக்கப்பட்ட குழி நிரம்ப ஆரம்பிக்கிறது. அவளுக்கு அந்த நேரம் பார்த்து பிரசவ வலி வருகிறது. தனது மண்ணுக்குள் வந்த பகைவர்களை ஒவ்வொருவராக கொன்று தள்ளுகிறான் ஜாக்குவார் பவ். அதன் பின் என்ன நடந்தது இதுதான் திரைக்கதை.
விறுவிறுப்பு குலையாத திரைக்கதை எம்மை கதிரையின் நுனிக்கே தள்ளிவிடுகிறது. கதை நகர்வில் மனைவி பிள்ளைகளின் நிலையென்ன, பகைவர்களின் கதி என்ன என்ற கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக, மிகுந்த அற்புதமாக கதையை நகர்த்துகிறார் இயக்குநர். சுமார் 2 மணி 18 நிமிடம் கொண்ட இப்படம் இரண்டு நிமிடங்கள் போல நகர்ந்துவிடுகிறது. 15 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் இப்படத்தை பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜாக்குவார் பவ் என்ற அந்த வீரனின் கதையில் :
01. எதையும் தாங்கும் மனது.
02. இறுதிவரை விடாத முயற்சி
03. இதுவரை திரையில் காணாத ஒரு கதாநாயகன்
04. தாய் மண்ணில் வாழும் வாழ்வே உண்மையான வாழ்வு
05. மரணத்திற்கு பயப்படாத உறுதி
இவைகளைக் கொண்டு பின்னப்பட்டு மனதைவிட்டு நீங்காத திரைப்படமாக மிளிர்கிறது.
படத்தைக் கூர்ந்து பார்த்தால் மறுபடியும் போராட முடியாது என்று பரப்பப்படும் கட்டுக்கதைகள் பொய்யானவை என்பதை உணர்த்துகிறது. மனைவி பிள்ளைகள் பாழும் கிணற்றில், எதிரியோ நயவஞ்சகம் மிக்க பலமானவன், கேட்கப் பார்க்க யாருமற்ற அவல வாழ்வு, அதற்குள்ளும் மரணத்திற்கு அஞ்சாத துணிவு இதுவே கதையின் ஜீவநாடி. கொடியவனான எதிரியை அழிக்க முடியும், மண்ணில் சுதந்திரத்துடன் வாழ முடியும் என்ற தெளிவான செய்தியை சொல்விட்டு போகிறது திரைப்படம்.
எல்லாவற்றையும் அழித்த எதிரியோடு இணைந்து வாழ்வோம் என்று கூறும் பேடிகள் நிறைந்த உலகில் ஒரு வீரனைப்பார்த்த மகிழ்வையும் நம்பிக்கையையும் தருகிறது திரைக்காவியம். பார்க்க வேண்டிய சிறந்த படம்.
திரைப்படத்தின் ரெய்லரை காண இங்கே அழுத்துங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக