திங்கள், 13 டிசம்பர், 2010

ஆட்சிக்காக ஜாதி மதவாதத்தை தூண்ட தயங்கவே தயங்காது காங்கிரஸ் . விக்கிலீக்ஸ்

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஆளும் காங்கிரஸ் கட்சி, மதவாத அரசியலில் ஈடுபட்டதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் அப்போதைய தூதர் டேவிட் முல்ஃபோர்டு தனது அரசுக்குத் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்களுக்கும் அவர்களது அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு ரகசிய தகவல் பரிமாற்றங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வருகிறது.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பைத் தாக்குதலில் இந்துத்துவ தீவிரவாத சக்திகள் ஈடுபட்டிருக்கலாம் என்று அப்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஏ.ஆர். அந்துலே தெரிவித்திருந்த கருத்திலிருந்து முதலில் விலகியிருந்த காங்கிரஸ் கட்சி, இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெளியிட்ட ஓர் அறிக்கையில், மறைமுகமாக அந்துலேவின் கூற்றை ஆதரிப்பதைப் போல கருத்து வெளியிட்டிருந்தது என்று முல்ஃபோர்டு தெரிவித்திருப்பதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

மேலும், அந்த அறிக்கையால், அந்துலேவின் அடிப்படையற்ற அறிக்கைக்கு முக்கியத்துவம் கிடைத்தாக முல்ஃபோர்டு கூறியுள்ளார்.

அடுத்துவரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் காங்கிரஸ் கட்சி, இவ்வாறு கருத்து வெளியிட்ட நிலையில், உள்துறை அமைச்சர் சிதம்பரம் அத்தகைய கருத்தை மறுத்தாலும், முஸ்லிம் மக்கள் தாங்கள் தேவையில்லாமல் குறிவைக்கப்படுவதாக தொடர்ந்து நம்புவார்கள் என்றும், அதன் மூலம் விசாரணை அமைப்புக்களும் உண்மையை வெளிக்கொணர விடாமல் தடுக்கப்படும் என்றும் முல்ஃபோர்டு கூறியதாக வீக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சினை முழுவதையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, தனது நலனுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதினால் காங்கிரஸ் கட்சி பழைய முறையிலான சாதி மற்றும் மதவாத அரசியலில் ஈடுபடத் தயங்காது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் முல்ஃபோர்டு கூறியதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக