
கல்வாரி மலையில் எதற்கு ஐம்பதாயிரம் வீடுகள்… ?
கல்வாரி மலை கொண்டு செல்லப்பட்டு நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இயேசுபிரான் பாலனாக பிறந்த நாளை மக்கள் மகிழ்வாக கொண்டாடும் திருநாள் இன்று..
அன்று, மக்கள் இல்லாத ஒரு பெரும் கற்குவியல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மக்களாக வாழ்வோர் செய்யக் கூசும் நயவஞ்சகங்களை எல்லாம் செய்து அவர் கொல்லப்பட்ட காட்சிகள் கண்முண் நிழலாடுகின்றன.
நிராயுதபாணியாக இருந்த ஒருவருடைய தலையில் முள்முடி மாட்டி கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்து, வக்கிரங்களை செய்தார்கள். அதுமட்டுமல்ல தாகத்தால் அவர் துடித்தபோது புளிங்காடியில் இருந்த அழுக்கடைந்த பாசியை வாயில் இடித்து சிரித்து கெக்கலித்தனர்…
பொல்லாத யூதர்களும், போர்ச் சேவகர்களும், அரச ஆளும் வர்க்கமும் மனிதன் என்பவன் பகுத்தறிவுடையவன் அல்ல, அவனைவிட விலங்குகளே மேல் என்பதை வெளிப்படுத்தியது கல்வாரிமலை நிகழ்வு.. அந்த நிகழ்வை மறந்து ஏதோ ஓர் ஆறுதல் பெற பாலன் பிறப்பு மனித குலத்திற்கு மருந்தாக அமைகிறது.
வெறும் முப்பது வெள்ளிக்காசுக்காக அவரைக் காட்டிக் கொடுத்தான் யூதாஸ். அக்கதையை ஆதாரமாக வைத்து எண்ணற்ற யூதர்களை சர்வாதிகாரி ஹிட்லர் கொன்றொழித்தான். கடைசியில் யூதர்களை காப்பாற்ற புறப்பட்ட நாடுகள் அவனைவிட அதிகமானவரைக் கொன்று, அவனையும் கொன்று யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற நாட்டையும் அமைத்துக் கொடுத்தார்கள்.
இறுதியில்,
உலகத்தில் இருப்பது இயேசுநாதரின் அரசா இல்லை யூதரின் அரசா என்பதை விளங்க முடியாத குழப்பத்தை இரு உலக யுத்தங்களும் ஏற்படுத்தின..

அந்த நாள் ஈழத்தில் மீண்டும் அரங்கேறியது..
மனிதன் திருந்திவிட்டானா என்பதைப் பார்க்க ஆண்டவன் வைத்த பரீட்சை அது..
கல்வாரி மலைபோன்ற மனிதர்கள் இல்லாத வெளிக்குள் ஈழத் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். சரணடையுங்கள் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்று நயவஞ்சகமாக நம்ப வைக்கப்பட்டார்கள். இறுதியில் என்ன நடந்தது… கல்வாரி மலையே கண்ணீர்விட வேண்டிய அவலம் நடந்தது…
இயேசுவின் கையில் உள்ள ஓர் உலகத்தில் இது நடக்குமா… ?
இசைப்பிரியாவின் சரணடைந்த உடம்பு கிடக்கும் கோலம் இயேசுநாதர் கிடப்பதை விட பேரவலமாக இருக்கிறதே.. சரணடைந்து ஏமாற்றப்பட்ட தளபதி ரமேஸ் என்பவர் உயிருக்காக கெஞ்சும் காட்சி நயவஞ்சகத்தின் கொடுமுடியாக தெரிகிறதே..
ஆண்டவரே…
கல்வாரி மலைக்காட்சியை விட இது கொடியதல்லவா.. சிலுவையை கொடியில் ஏந்திய நாடுகளும், வத்திக்கானும், உலக கிறீஸ்தவ பேராயங்களும் இது கல்வாரி மலைக்காட்சியே என்பதை இன்றுவரை கண்டு கொள்ளாமல் உறைந்து கிடந்தனவே ஏன் … ?
போர்க்குற்றம் என்று ஊளையிடுகிறார்கள்.. தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் போட்டு சிறீலங்கா ஒரு போர்க்குற்ற நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஏன் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் ? மற்றய கட்சிகளில் யாராவது ஒருவர் ஒரு தனிநபர் பிரேரணையாக அதைக் கொண்டுவராமல் இருப்பதன் மர்மமென்ன.. அப்படியொரு பிரேரணை வந்தால் அதை எதிர்த்து யார் வாக்களிக்கிறார்கள் என்பதை அறிய முடியுமல்லவா… இதைக்கூட சுட்டிக்காட்டத் தெரியாமல் தமிழரின் அரசியல் அறிவு சாக்கடைக்குள் நாறுகிறது.. இவர்களில் யார் புனிதன்..? யார் ஈழ ஆதரவாளன்..? வெட்கமாக இருக்கிறது..
அதை விடுங்கள்…
முள்ளிவாய்க்கால் மட்டுமா இன்று ஈழத் தமிழர் வாழும் வடக்குக் கிழக்கே கல்வாரி மலையாகக் கிடக்கிறது.. எங்கும் இராணுவ முகாங்கள், ஆயுதமேந்திய முப்பது வெள்ளிக்காசு குழுக்களுடைய ஆதிக்க வெளியாக அந்த இடம் கிடக்கிறது.. கடந்த காலங்களில் அங்கே என்ன நடந்திருக்கிறது.. விக்கிலீக்ஸ்சை படித்தால் வெட்கம் தலை குனிய வைக்கிறது.

பிரபாகரனின் வெறும் கல்லால் கட்டப்பட்ட வீடே வாழ முடியாத நிலை.. இறந்து போன தமிழ் வீரனின் சமாதியே இருக்க முடியாத கல்வாரி மலையாகக் கிடக்கும் ஒரு தேசத்தில் பாலன் எந்த வளவுக்குள் பிறப்பது ? யாழ்ப்பாணத்து காணிகள் முழுவதும் கோத்தபாயவின் கட்டுப்பாட்டுக்குள்.. எந்தக் கோடியாலுக்குள் பாலனை பிறக்க வைக்கப்போகிறீர்கள்… ?
கல்வாரி மலையில் ஏது அபிவிருத்தியும், ஐம்பதாயிரம் வீடுகளும்.. யாரை உட்கார வைக்கப்போகிறீர்கள்.. சிறீலங்காவில் மத அங்கி அணிந்த மல்கம் ரஞ்சித் புலம் பெயர் தமிழர் போர்க்குற்றம் என்று பேசுவது தப்பு என்றும் சிங்கள அரசு செய்தது சரி என்றும் கூறினார்.. அதை மத அங்கியணிந்த பிதாக்கள் எவரும் சுட்டிக்காட்ட வக்கற்று தூபதீபங்களை சுழற்றுகிறார்கள்..
பாவம் இயேசு ஏதுமறியாத பாலனாகவே பிறக்க வேண்டிய நிலையில் பிறக்கிறார்…
அதோ… அரசியல் தலைவர்களின் நத்தார் வாழ்த்துக்கள் வானைப் பிளக்கின்றன..
பிள்ளைகள் நத்தார் பரிசுகளோடு சவுக்கு மரத்தைச் சுற்றி ஓடுகிறார்கள்… என்ன செய்ய… ?
எவ்வளவுதான் சோகம் இருந்தாலும், மக்களின் இந்த மகிழ்வை வரவேற்று நாமும் வாழ்த்துக்களைக் கூற வேண்டும் அதுவே மானிடத்தின் கடமை. இதுபோல இன்பமாக எல்லாநாளும் எல்லோரும் வாழும் உலகை ஆண்டவன் தரவேண்டும் என்று வணங்குவோம். அன்பே வடிவான அந்த இயேசுபிரானின் கருணைஒளியை எந்த மதவேடத்தாலும், அரசியல் வேடதாரித்தனங்களாலும் ஏமாற்ற முடியாது என்ற நம்பிக்கை ஒன்றே மீதமாக உள்ளது.. இயேசுபிரான் அனைத்தையும், அனைவரையும் பார்த்துக் கொண்டே ஒளியாக மீண்டும் பிறக்கிறார்..என்று போற்றுவதும் நமது தன்னம்பிக்கைக்கு அவசியம்…
ஈழத் தமிழனுக்கு நாடும் வேண்டாம், காடும் வேண்டாம்.. ஐம்பதாயிரம் வீடும் வேண்டாம்.. ஐ.நா சபையும் வேண்டாம்… போலியான போர்க்குற்ற விசாரணையும் வேண்டாம்.. உங்களுடைய பயங்கரவாதிப்பட்டமும் வேண்டாம்..
இந்த நத்தார் தினத்தில் நாம் கேட்பது தமிழீழமோ வடக்குக் கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையோ அல்ல.. ஊசி முனை நிலமோ அல்ல…
புதுமாத்தளன் நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுத்த அத்தனை நாடுகளையும் ஆண்டவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே..
அற்ப ஆசைகளுக்காக இந்தளவு தூரம் அவர்கள் போயிருக்கிறார்கள் என்றால் நமது இழப்பைவிட சிங்கள அரசிடமும் அதற்கு துணை போனவரிடமும் பெரிய தவறு இருக்க வேண்டும் என்பதே உண்மை.. நம்மைவிட ஆண்டவன் அருள் அவர்களுக்கே அதிகம் தேவைப்படுகிறது..
யாதும் ஊரே யாவரும் கேளிர் – ஒன்றே உலகம் என்ற கணியனின் பைபிள் நம்மிடம் இருந்தாலும் பாலன் இயேசுவிடம் ஒரேயொரு மன்றாட்டத்தை மட்டும் இந்த நேரம் வைத்துவிட மனது துடிக்கிறது..
ஆண்டவரே இந்த உலகத்தில் குழந்தையாக பிறக்க நீங்கள் கொண்ட துணிச்சல் பாராட்டுக்குரியது..
ஆனால்…

இசைப்பிரியாக்கள் போன்ற எங்கள் இனிய சகோதரிகளை இனியும் ஒரு தடவை உங்கள் உலகுக்கு குழந்தையாக அனுப்பி வைக்காதீர்கள்…
எங்கள் பாலன்களை நத்தார்கால பரிசுப்பொருள்களாக முள்ளிவாய்க்கால் சவுக்கு மரத்தில் தொங்க விட்டுவிடாதீர்கள்..
வாழ்க நத்தார் விழா…
மதஅங்கி அணிந்த அனைவர்க்கும், சிலுவைக் கொடி சுமந்த அத்தனை நாடுகளுக்கும், சவுக்கு மரத்தைச் சுற்றி ஓடும் அத்தனை பேருக்கும்..
இசைப்பிரியாவின் இனிய நத்தார் வாழ்த்து..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக