இன்று உலக மகா மோசடியாக ஈழத் தமிழ் மக்களை மர்ம இணையத்தள அரசியல் தலைமை வழி நடத்துகிறது. எமது தமிழரின் ஊடகங்களும் எதுவித சமுதாயப் பொறுப்புணர்வும் இல்லாது இணையத்தள அனாமதேய அறிக்கைகள் அறிவித்தல்களை மக்களிடம் பரப்பி அவற்றை நம்பச் செய்து சிலரின் மோசடி அரசியலுக்கு உதவுகின்றன. இனியாவது புலம் பெயர் ஈழத் தமிழினம் இத்தகைய ஏமாற்றுக்காரரின் மோசடி அரசியலை அம்பலப்படுத்தி அவர்களின் முகமூடிளை கிழித்து எறிய முன்வரவேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ அரசு நோத்கிய ஆட்சியின் வரலாற்றுச் சாதனை உலகம் கண்டு போற்றிப் பழகிய ஒன்றாகும். அதன் உயர்ச்சியும் வீழ்ச்சியும் மேதகு தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரனின் வாழ்வோடு ஒன்றித்து விட்ட ஒன்றாகவே வரலாற்று ஆசிரியர்களால் பார்க்கப்படும் நிலைக்கு அந்த இயக்கம் மாறிவிட்டது.
இது அந்த உன்னதத் தலைவனின் பேராற்றலுக்குக் கிடைத்த மகத்தான ஏமாற்றம். இன்னொரு வகையில் சொல்வதானால் மகிந்த சிந்தனையில் மந்திரம்போல் கட்டுப்பட்டுச் செயலாற்றும் சிங்களப் பேரினவாதத்துக்குக் கிடைத்த வெற்றி. இந்தப் பெரு வெற்றியைச் சிங்களத்தின் கைகளில் தானாகவே ஒப்படைத்து விட்டு ஈழத் தமிழினம் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கிறது. அப்படியான நிலையை ஏற்படுத்தி உள்ளவர்கள் அந்த மாபெரும் தலைவனை வாய் கூசாது இன்னமும் தமது அண்ணன் என அழைத்து வரும் அவரது சில ஆசைத் தம்பிகளே.
இன்று இலங்கை இந்தய அரசுகள் தமது அனைத்துலக ராஜாங்க புலனாய்வு வளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழரின் நலங்கள் வளங்கள் மனங்கள் பலங்கள் என எல்லாவற்றையும் சிததைத்து அடிமைப்படுத்த முனைகின்றன. இத்தகைய முனைப்பாடுகளின் வெளிப்பாடாக தமிழர் நிலங்களைச் சிங்களவரிடமும் பிற நாட்டினரிடமும் ஒப்படைத்து தமிழரை நிலமற்ற வாக்குப் பலமற்ற இனமாக்குவதைக் காணகிறோம்.
பாடசாலக் கல்வித் திட்டம் சிங்கள பௌத்த சிந்தனைக்கு மாற்றப்பட்டு வருகிறது. சிங்கக் கொடியும் சிங்களத்தில் தேசிய கீதமும் புத்த பள்ளிகளும் கட்டாயமாகப் புகுத்தப்படுகிறது. மாவீரர் துயிலும் இல்லங்கள் மண் மேடாவும் சிங்கள இராணுவ மையங்களாவும் மாற்றப்பட்டுவிட்டன. எஞ்சி இருப்பவை புலம் பெயர் தமிழரின் வளங்களும் மனங்களும்தான். இவற்றையும் கொள்ளை அடித்து விட்டால் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர் முற்றுப் பெற்றுவிடும்.
இந்த அரசுகளின் திட்டத்துக்கு இந்தியத் தமிழரின் மாநில அரசு தனது நிறைவான ஆதரவை மறைமுகமாகக் கொடுத்து வருகிறது. இந்திய மத்திய அரசின் அழுத்தங்களுக்கு ஏற்ப எமது தமிழர் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் வளைந்து நெளிந்து இசைவாக்கம் காண்கின்றன. ஆனால் இவை தமது வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு வழமையான மழுப்பல் அரசியலைச் செய்து வருகின்றன. எனவே இவர்களும் இலங்கை இந்திய அரசுகளின் வேலைத் திட்டத்துக்கு இசைவாகவே செயற்படுகின்றனர். இந்தக் காரணத்தால் இவர்களின் புலம்பெயர் கிளைகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் புலம் பெயர் தமிழர் நிராகரிப்பது அவசியமாகிறது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னரை விடவம் உறுதியாகவும் கட்டுக் கோப்புடனும் செயற்படுவது தமிழ் மக்ககளின் நலன்களுக்கு முக்கியமானது. ஆனால் இவர்களால் தமக்குள் ஒரு தலைவனைக் கண்டு அறிந்து ஏற்று அந்த மாபெரும் இயக்கத்தை தொடரவும் முடியவில்லை. ஓரு விடுதலை இயக்கமாகச் செயற்பட்டுத் தமிழீழ மக்களை வழிநடத்தும் தகமை பெற்றுக் காணப்படவும் இல்லை.
அதேவேளையில் முகமும் முகவரியும் காட்டாத, அல்லது இவை எதுவுமே இல்லாத பேர்வழிகள் இணையத் தளங்களில் அறிக்கைகள் அறிவித்தல்கள் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றும் தலைமைச் செயலகம் என்றும் தெரிவித்துத் தமிழீழ மக்களை வழி நடக்துபவர் தாமே எனக் காட்டிக் கொள்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை இத்தகைய செயற்பாடுகள் தம்மிடம் கிடைத்து விட்ட வசதி வாய்ப்புகளை, சொத்துச் சுகங்களை மற்றும் ஆதிக்க பலத்தை தமதாக்கும் சுயநல எண்ணம் ஒன்றைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் ஈழத் தமிழ் மக்கள்மீது நிலத்தில் இலங்கை அரசும் புலத்தில் இந்தியாவும் அதன் நேச நாடுகளும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தவே பயன்படுகிறது.
இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரமான தாக்குதலைச் செய்யும் ஆற்றலும் எண்ணமும் கொண்டுள்ளது என்ற தோற்றப்பாட்டை உலக அரங்கில் இலங்கை இந்திய அரசுகள் பிரச்சாரப்படுத்த இவர்களின் இணையத்தள அனாமதேய மர்ம அரசியல் பிரச்சாரம் உதவுகிறது.
இவர்கள் மே 18 2009ந் திகதிக்குப் பின்னர் அப்பாவித் தமிழ் மக்கள் முட்கம்பி முகாம் மற்றும் சிறைகளில் முடிவின்றிச் சித்திரவதைக்கு உள்ளாகி உபத்திரவங்களை அனுபவிப்பதை ஒரு சிறிதும் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா அவுஸ்திரேலியா கனடா, யேர்மனி, அமெரிக்காவிலும் தமிழின உணர்வாளர்களும் அப்பாவித் தமிழ் பெண்கள் குழந்தைகளும் கூட புலி உறுப்பினர் அல்லது ஆதரவாளர் என்ற ஆதாரமற்ற சந்தேகத்தின் பேரால் கடுமையான விசாரணை, தடுப்புக் காவல், நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல் போன்ற துன்புறத்தல்களுக்கு உள்ளாகிறார்கள். இலங்கையில் இன்றும் ஆட் கடத்தல் கொலை கொள்ளை கற்பழிப்பு பசி பட்டினி தொடர்கின்றன.
சன் சீ கப்பலில் கனடா வந்தவர்கள் எல்லாம் புலிப் பயங்கரவாதிகளாக நடக்தப்படுகினறனர். தமிழ்ப் பெண் கழுத்துத் தாலி கூடப் பயங்கரவாதச் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த நாடுகளில் பயங்கரவாத இயக்கமாகத் தடை செய்யப் பட்டுள்ளமையே. இந்தத் தடைக்கு எதிராக உலக நாடுகளின் நீதி மன்றங்களில் வழக்குத் தொடுத்து நீதி கோர எவரும் கிடையாது. இந்தியாவில் தனிநபர் தொடுத்த வழக்கைப் புலிகள் தரப்பில் எவரும் நீதிமன்றத்தில் வாதாட இல்லாத காரணத்தால் நீதியான விசாரணைக்கு இடமற்றுப் போய்விட்டது.
நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் அகதித் தஞ்ச வழக்கில் புலிகள் இயக்கம் ஒரு அரசியல் விடுதலை இயக்கம் எனவும் அது ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல எனத் தீர்ப்பளித்த பின்னரும் உலக அளவில் நீதி கேட்டுப் பெறும் நிலையிலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் செற்பட முடியாதபடிக்கு சிதறிக் கிடக்கிறது. ஆங்காங்கே சில வால்கள் விழாக்களை நடத்திப் பணம் சேர்க்கும் பணியைச் செய்கின்றன. ஆனால் முதன்மையாக இன்று ஓரளவு செயற்பட்டு வரும் நாடு கடந்த அரசு பணமும் பலமும் இல்லாது திண்டாடித் தவிக்கிறது.
அதனால் புலி என்ற பேரையும் புலிக் கொடியையும் கைவிடவும் முடியவில்லை. புலிகளின் ஏகத் தலைமையாகச் செயற்படவும் முடியவில்லை. அதே சமையம் பலமும் பணமும் படைத்த சிலர் தாமும் செயற்படாது செயற்படுபவரின் தலைமையையும் ஏற்காது முரண்பாடுகளை வளர்த்து ஈழத் தமிழினத்தின் அழிவுக்கு வகையும் வசதியும் தேடிக் கொடுக்கின்றனர். புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடைகளை நீக்க உலக அளவில் நாடு கடந்த அரசோ அலலது யாராவது ஒரு கொம்பனோ நீதி மன்றங்களில் வழக்குகளை நடத்தி உடனடியாக தடைகளை நீக்க வேண்டும்.
இல்லை என்றால் மாவீரர் நினைவு நாட் கொண்டாட்டங்களும் புலிகளின் யெரால் நடத்தப்படும் கலைக் கூத்துகளும் தனித் தமிழீழ தேசத்தை வரலாற்றுச் சகதியில் குழி தோண்டிப் புதைக்கவே உதவும். இப்படியான அநாமதேய மோசடித் தலைமைகளை தமிழ் மக்களும் தமிழ் ஊடகங்களும் அடையாளம் தெரிந்து முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே தமிழ் இனமும் தமிழ் ஈழமும் உயிர் பிழைக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக