வியாழன், 30 டிசம்பர், 2010

இலங்கையின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னரை விடவும் தீவிரம்

யுத்தமேதுமில்லா சூழ்நிலையில் இலங்கையின் ஆயுதக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னரை விடவும் தீவிரம் பெற்றிருப்பதாக பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக ரஷ்யா, இஸ்ரேல், இந்தியா எனப் பல நாடுகளிலிருந்தும் நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தற்போது சீனாவிடம் இருந்து ஜே.எப். ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.

அமெரிக்காவின் எப்-16 போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை அடியொத்ததாக தயாரிக்கப்படும் ஜே.எப். -17 ரக போர் விமானங்கள் வல்லரசு நாடுகளின் விமானங்களை விட விலை குறைந்தவையாகும்.

ஆயினும் இவ்வகை விமானங்கள் ரேடாரில் வழிநடாத்தப்படும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதுடன், 3.6 தொன் வெடிபொருட்களைக் காவிக்கொண்டு மணித்தியாலத்துக்கு இரண்டாயிரம் கிலோமீற்றர்கள் வேகத்தில் பறக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனவாகும்.

அண்மையில் கூட தரையிலிருந்து செலுத்தப்பட்டு விமானங்களையும், தளங்களையும் தாக்கக் கூடிய ஏவுகணைகளை வாங்கும் முகமாக இந்தியாவுடன் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டிருந்தது. ஆயினும் யுத்த சூழல் அறவே இல்லா நிலையில் இவ்வாறான ஆயுதத் தளவாடங்களின் கொள்வனவு எதற்காக என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக