சிறிலங்காவில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 6 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 26ம் நாளன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டினை எதிர்த்துத் தமிழ்ச் சமூகத்தினர் தொடரான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்ற போதும் குடாநாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரசில் P K Balachandran எழுதிய செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆழிப்பேரலையினை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்தப் பிரதான நிகழ்வில் சிறிலங்காவினது அதிபர் டீ.எம் ஜெயரத்தின பங்குபற்றியதால் தேசிய கீதத்தினைச் சிங்கள மொழியில் பாடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியிருந்ததாக குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
தேசிய கீதம் சிங்கள மொழியில்தான் பாடவேண்டும் என இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும் அரச அதிகாரிகளும் படைத்தரப்பினரும் கூட்டாக வலியுறுத்திய அதேநேரம் தேசிய கீதத்தினைச் பாடுமாறு பணிக்கப்பட்ட தமிழ் மொழிமூலப் பாடசாலையான இந்து மகளிர் கல்லூரியின் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
இருந்தும் மாற்றுத் தேர்வுகள் எதுவுமின்றி இவர்கள் சிங்கள மொழியிலே தேசிய கீதத்தினைப் பாட நேர்ந்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இது தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்திருந்தன.
சிங்கள மொழி தமக்குத் தெரியாது என்பதால் அந்த மொழிச் சொற்களை உச்சரித்துப் பாடுவதற்குத் தங்களால் முடியாது என இந்த மாணவிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
தாங்கள் தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தினைப் பாடிப் பழக்கப்பட்டவர்கள் என வாதாடியிருக்கிறார்கள். ஆனால் இவர்களது எதிர்ப்புகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது.
குறிப்பிட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக குடாநாட்டினைச் சேர்ந்த ஒரேயொரு தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகமொன்று கேவ்வியெழுப்பியபோது, நாட்டினது அதிபர் மற்றும் பிரதமர் போன்ற உயர் மட்டத் தலைவர்கள் பங்குகொள்ளும் நிகழ்வுகளில் தேசிய கீதத்தினைச் சிங்கள மொழியில் பாடுவதுதான் வழமை என்றிருக்கிறார்.
குறிப்பிட்ட இந்த நிகழ்வானது கொழும்பு அரசாங்கத்தினால் நேரடியாக ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்விது எனக் குறிப்பிட்ட யாழ் மாவட்ட அரச அதிபர் எமில்டா சுகுமார், அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அமையச் செயற்படுவதைத் தவிர தமக்கு மாற்றும் தேர்வேதும் இல்லை என்றிருக்கிறார்.
'சிறிலங்கா மாதா' எனத் தொடங்கும் சிறிலங்காவினது தேசிய கீதமானது பெரும்பான்மை இனத்தவர்களின் மொழியான சிங்களத்திலேயே எழுதப்பட்டபோதும் 1952ம் ஆண்டு முதல் அதன் உத்தியோகபூர்வ தமிழ் மொழிபெயர்ப்பான 'சிறிலங்கா தாயே' என்ற வடிவமே தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளிலும் பாடசாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் சிறிலங்காவினது அமைச்சரவையில் சிங்கள மொழியில் மாத்திரம்தான் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை உருவெடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த வாதத்தினை முற்றாக எதிர்த்த அதேநேரம் சிங்களத் தேசியவாதிகள் இதற்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள்.
குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானம் இன்மும் எடுக்கப்படாதபோதும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற படைக்கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படவேண்டும் என படையினர் வலியுத்துவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக