புதன், 29 டிசம்பர், 2010

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்கிறது - இன்னர் சிற்றி பிரஸ்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்வதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் திகதி பொது செயலாளர் பான் கீ மூன் அறிவித்தார்.

எனினும் கடந்த 23-ம் திகதி இந்தக்குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெறவிருந்த ஐக்கிய நாடுகள் சபையில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு மேற் கொள் ளவுள்ள விஜயம் தொடர்பில் இன்னர் சிற்றி பிரஸ் பல கேள்விகளை எழுப்புவதாக இருந்தது.

எனினும் இந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டதன்பின்னர் அதற்கான விளக்கத்தைக் கூறி இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிற்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பிலான விளக்கம் என்பவை குறித்து அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு இந்தக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதுடன் மீண்டும் இன்று தொடரும் என நான்கே வார்த்தைகளில் பர்ஹான் ஹக் பதில் வழங்கியிருந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக