ஸ்ரீலங்காவில் இந்த வருடத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை எதிர்வரும் மாதத்தில் வெளியிடவுள்ளது என்று ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான ஐ.நாவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் சர்வதேச பிரகடனத்தில் இதுவரை 21 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன எனவும், இப்பிரகடனம் நேற்று முன்தினம் முதல் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தில் ஸ்ரீலங்காவையும் கைச்சாத்திட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்காவில் ஆட்கடத்தல், காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ள ஐ.நா. சபை, இது குறித்து ஸ்ரீலங்கா அரசுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
குறிப்பிட்ட பிரகடனத்துக்கு ஸ்ரீலங்கா முன்னர் ஆதரவு வழங்கியிருந்தபோதிலும், சில பிணக்குகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தப் பிரகடனம் அமுல்படுத்தப்படுகிறது.
கைதுகள், தடுத்து வைத்தல், கடத்தல் மற்றும் அதிகாரத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் உரிமை மீறல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்தல், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்குதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களைப் பாதுகாக்கும் வகையில் அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும் இப்பிரகடனம் அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக