திங்கள், 20 டிசம்பர், 2010

அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களால் ஒரு வருடத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம்.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு எதிரான போராட்டம் குளிர் கால நிலையையும் பொருட் படுத்தாது நேற்று முன்தினம் 18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆடைகளின் 50 வீதமானவை அமெரிக்க மக்களின் பாவனைக்கே செல்கின்றன. இவற்றை பாவிப்பது இன அழிப்பில் ஈடுபடும் சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தவும், யூதர்களை போல் ஒரு பாரிய இன சுத்திகரிப்புக்கு முகம் கொடுத்திருக்கும் ஈழ தமிழ் மக்களை ஒடுக்கவும் உதவுமெனில் இவற்றை பெருவாரியான அமெரிக்க மக்கள் புறக்கணிப்பர். இவ்வாறான நிர்ப்பந்தம் ஏற்படும் கட்டத்தில் தமது நற்பெயரை காக்கும் வண்ணம் இவ் ஆடைகளை விற்கும் நிறுவனங்கள் அதை இடை நிறுத்த வேண்டி வரும்.


வரலாற்றில் இன வெறி ஆட்சி செய்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான உலகம் தழுவிய புறக்கணிப்பு போராட்டம் எவ்வாறு வெற்றி பெற்றதோ, அதே பன்று இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் இப் போராட்டமும் வெற்றி பெரும் சாத்தியம் அதிகம் உள்ளது என இதை தலைமை தாங்கும் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் கருத்து தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் வெளியான போர் குற்ற காணொளியில் 26 வயதுடைய இளம் தாய் இசைப்பிரியாவின் கோரமான படுகொலை Channel 4 தொலைக்காட்சி சேவையில் காண்பிக்கப்பட்ட பின்னரும், படித்த அறிவார்ந்த பெண்களை நம்பி ஆடைகள் விற்கும் Victoria Secret  நிறுவனத்தினர் எவ்வாறு ஒரு இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் அரசுடன் வர்த்தக உறவை பேணலாம் என இந்த போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்போராட்டத்தை ஒட்டி Old Town Alexandria, Virginia என்னும் நகரில் GAP ஆடை விற்பனை நிறுவனத்திற்கு முன்னாள் இலங்கையில் இருந்து உற்பத்தியாகும் ஆடைகளை வாங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த நகரம் அமெரிக்க தலைநகரான Washington  DC க்கு மிக அருகாமையில் இருப்பதுடன், அமெரிக்க அரசில் வேலைபார்க்கும் பலர் வசிக்கும் ஒரு பகுதியாக உள்ளது.

ஆர்ப்பாட்டம் செய்த மனித உரிமை ஆர்வலர்களுடன் பேசிய பல அமெரிக்க மக்கள் தாங்கள் இப்படியான சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இனப்படுகொலை செய்யும் ஒரு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும், இப்போராட்டம் மேலும் வலுப்பெற்று வெற்றிபெற வாழ்த்தியும் சென்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் பேரவையால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டம் Victoria Secret நிறுவனத்தின் அதிகாரிகள் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. எனினும் இன்னும் இப்போராட்டம் புலம் பெயர் தமிழர்களால் மிகவும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டாலே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக