ஐ.நா.நிபுணர் குழுவின் முன்னணியில் இலங்கையில் இடம் பெற்ற தமிழினப் படுகொலைகள் தொடர்பில் சாட்சியமளிக்க தான் தயாராக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிபுணர் குழுவுக்கு மனுச் செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இது தொடர்பாக ஐ.நா.நிபுணர் குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நான் கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். எனக்கு இலங்கை அரசினாலும் ஆயுதங்குழுக்களினாலும் (கருணாகுழு, பிள்ளையான் குழு) ஏற்பட்ட கொலை அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பின் நிமிர்த்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையைவிட்டு வெளியேறினேன்.
தற்போது இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற தமிழினப் படுகொலை மற்றும் கடந்த காலங்களில் தமிழர் தாயகப் பகுதியில் இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பான ஐ.நா.விசாரணக்குழு முன்னால் நான் நேரில் சாட்சியமளிக்க விரும்புகின்றேன்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக அரசியலுக்குள் வருவதற்கு முன்னர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் பொதுவேலைகளில் ஈடுபட்டு வந்தேன். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அரசாங்கப் பாடசாலை ஆசிரியராக நியமனம் பெற்றேன். அத்தோடு நான் ஊடகத்துறையிலும் அனுபவம் பெற்றிருந்தால் 1991 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் ஊடகவியலாளராகவும் செயற்பட்டேன். அதே காலப்பகுதியில் சர்வதேச ஊடகவியலாளராகவும் செயற்பட்டேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வரை இப்பதவிகளில் இருந்தேன்.
இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருந்ததன் காரணமாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதுமாத்திரமின்றி பல இனப்படுகொலைகள், தமிழ் இனத்திற்கு எதிரான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பல தமிழ் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட விடயங்கள் என்பனவற்றை நான் நேரிலும் பார்த்துள்ளேன்.
அதிலும் முக்கியமாக கடந்த 1980 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைகள், திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பாக நான் ஆவணங்களைச் சேகரித்தது மாத்திரமின்றி அவற்றை தொடர் கட்டுரையாக இலங்கையில் வெளிவரும் தேசியப் பத்திரிகையான “வீரகேசரி” பத்திரிகையில் கட்டுரையாக எழுதினேன். அத்துடன் அக்கட்டுரைகளைத் தொகுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஆவணப் புத்தகமாக வெளியீடு செய்துள்ளேன். அதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் பல அனுபவங்கள், திகிலுட்டும் பயங்கரம் நிறைந்த சம்பவங்கள் என்பனவற்றை ஆவணப்படுத்தியுள்ளேன். அவற்றையும் தங்கள் விசாரணையில் என்னால் சமர்ப்பிக்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற மயிலந்தனை படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, அம்பிழாந்துறை படுகொலை, வந்தாறுமூலை பல்கலைக்கழகப் படுகொலை, சத்துருக்கொண்டான்படுகொலை உட்பட அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற உடும்பன்குளம் படுகொலை, வீரமுனை படுகொலை என பல படுகொலைகள் தொடர்பான பல சாட்சியங்களை என்னால் சமர்ப்பிக்க முடியும்.
கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியிலும் மற்றும் ஏனைய பகுதிகளிலும் இடம் பெற்ற தமிழினப்படுகொலைகள் தொடர்பான பல சான்றுகளை என்னால் தங்கள் முன் சமர்ப்பிக்க முடியும்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதானம் நிலவிய காலப்பகுதியில் குறிப்பாக 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அரசின் புலனாய்வுத்துறையினரும் ஆயுதக்குழுக்களான கருணாகுழு, பிள்ளையான்குழு என்பன இணைந்து மேற்கொண்ட பல கடத்தல்கள், காணாமல்போன சம்பவங்கள், படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களையும் என்னால் தங்கள் முன் சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன் வன்னியில் இடம் பெற்ற இறுதிக் கட்ட போரின்போது இடம் பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பாக நான் பல ஆதாரங்களை வைத்துள்ளேன். அதேவேளை வன்னியில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நான் நேரடியாக அங்கு நின்றிருந்தேன். அக்காலகட்டத்தில் நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் வன்னியில் தங்கியிருந்து மக்களின் அவலங்களை நேரில் பார்த்தேன். அதாவது முள்ளிவாய்காலில் போர் ஓய்வுக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே வன்னியில் இருந்து பலத்த கஸ்டத்திற்கும் உயிராபத்திற்கும் மத்தியில் வெளியேறினேன்.
அதன் பின்னரே நான் இலங்கையை விட்டு தப்பி வந்தேன். எனவே வன்னியில் இடம் பெற்ற பல படுகொலைகள், விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள், இரசாயனக்குண்டுத் தாக்குதல்கள் என அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான நேரடி சாட்சியாகவும் நான் உள்ளேன். அதேவேளை இறுதிவேளையில் இடம் பெற்ற பல படுகொலைகள் தொடர்பான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. எனவே இவற்றையும் என்னால் தங்கள் விசாரணையில் சமர்ப்பிக்க முடியும்.
எனவே இவை தொடர்பாக விரிவாக தங்களுக்கு நான் எழுதுவதானால் தங்களால் வரையறுக்கப்பட்ட கடதாசிகளின் எண்ணிக்கை எனக்குப் போதாததாகவே இருக்கும் என கருதுகின்றேன். எனவே நான் இந்த விடயங்களை சுருக்கமாக தற்போது தங்களுக்கு எழுதியுள்ளேன். எனவே எதிர்காலத்தில் தங்களின் விசாரணைக்குழு முன்னால் என்னை அழைக்கும் பட்சத்தில் அனைத்து விடயங்களையும் விரிவாக சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக