உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.
பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். ‘மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை’ இவை மாறி மாறிப் பருவக் காலங்கள் மனிதனை ஆண்டு வந்ததால் தமிழன் ஆண்டு என்று அழைத்தான். என திரு. வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார்.
மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார்.
தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும். ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வானியலாளர்களை ‘அறிவர், கணி, கணியன்’ என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் “அறிவர்கள்” குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.
பண்டையத் தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தனர்.
“வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்” என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.
1 நாழிகை – 24 நிமிடங்கள்
60 நாழிகை – 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் – 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் – 1 நாள்
இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்களை இவ்வாறு கணக்கிட்டத் தமிழன்; காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.
1. இளவேனில் – தை – மாசி மாதங்கள்
2. முதுவேனில் – பங்குனி – சித்திரை மாதங்கள்
3. கார் – வைகாசி – ஆனி மாதங்கள்
4. கூதிர் – ஆடி – ஆவணி மாதங்கள்
5. முன்பனி – புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6. பின்பனி – கார்த்திகை – மார்கழி மாதங்கள்
பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்.
பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு – போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது – போகியது – போகி) பொங்கல் என்பது பொங்குதல் – ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.
எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே (சனவரி 15) கொண்டாடப்பட வேண்டும்.
தை மாதச் சிறப்பு
தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது.
கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் தமிழர் முதுமொழியை “புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்” என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.
தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டை இளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர்.
தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக கால காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந் தொட்டு இருந்து வருகின்றது.
இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச் சார்பற்று அனைத்து தமிழரதும் திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் (சனவரி 15) தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வின் முடிவாகியுள்ளது.
- விக்கிப்பீடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக