யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அசம்பாவிதங்கள் மூலம் தூங்கிக் கொண்டிருக்கும் புலிகளை மீண்டும் தட்டி எழுப்ப அரசு முயற்சி செய்கிறது என்று ஐ.தே.கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவல கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.கட்சியின் தவிசாளரும், எம்.பியுமான காமினி ஜயவிக்ரமபெரேரா இவ்வாறு கூறினார்.அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:யாழ்ப்பாணத்தில் இப்போது கொள்ளை, கொலை, காணாமல்போதல் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பெருமளவில் இடம்பெற்று வருகின்றன. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.ஆனால், இந்த அசாதாரண நிலைமையை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. அங்கு பெரிதாக எதுவும் இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இந்தக் கவனயீனம் பாரதூரமானது.இந்த நாட்டு மக்கள் அனைவரையும் நாம் இலங்கையர்களாகவே பார்க்கவேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற வேறுபாடு காட்டக்கூடாது. அனைவரையும் இலங்கையர்களாகப் பார்த்தால் மட்டுமே இவ்வாறான அசம் பாவிதங்களை இல்லாதொழிக்க முடியும்.
புலிகளை இல்லாதொழித்தது இந்நாட்டு மக்களை நிம்மதியாக வாழவைக்கத்தான். ஆனால், மீண்டும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் புலிகளை இல்லாதொழித்ததில் என்ன பலன் இருக்கின்றது.
யாழில் இடம்பெறுகின்ற அசம்பாவிதங்கள் மூலம் இந்த அரசு புலிகளை மீண்டும் தட்டிஎழுப்பவே முயற்சிசெய்கின்றது. இது நாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அசம்பாவிதங்கள் யாழில் மட்டும் இடம்பெறவில்லை. தெற்கிலும் இடம்பெறுகின்றன. இந்த நிலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழலை அரசு உருவாக்கிக் கொடுக்கவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக