திங்கள், 10 ஜனவரி, 2011

எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ’ என்பது தமிழ்ப் பழமொழி. இந்தப் பழமொழியின் பொருள் மிகவும் கருத்துச் செறிவுடையது. சமகாலத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடியதும் இதுவே. புற்றில் குடியிருப்பது என்ன பாம்பு என்பது தெரியாமல் இருப்பது போல, தமிழ் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் யார்? பாடுபடுவது போல நடிப்பவர்கள் யார்?

நடிப்பது மட்டுமன்றி எங்களை விற்பதற்காகவே வெளிக்கிட்டவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்வதில் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர்.

இதனால் உண்மையாக – விசுவாசமாகத் தமிழ் மக்கள் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்களை உதறித் தள்ளி விட்டு நடிப்புச் சுதேசிகளை நம்மவர்கள் என்று நம்பி ஏமாறும் பரிதாபத்தில் தமிழினம் இருக்கிறது. என்ன செய்வது! சிறுபான்மை இனங்களில் இத்தகைய பரிதாபங்கள் இருப்பது வழமை என்றாகி விட்டது.

மக்கள் தெளிவடையாதவரை இத்தகையவர்கள் கூடவே இருந்து குழி பறிப்பார்கள்.

இனத்திற்காகப் பாடுபடுவது போல பாசாங்கு செய்வார்கள். உண்மைத் தகவல்களைத் திரிவடைய வைப்பார்கள். மக்களும் அவற்றை உண்மையெனக் கருதி விடுவர். இத்தகைய வேதனையான நிலைமை இருக்கும் போது தமிழினம் விடிவு பெறுவது முடியாத காரியம்.

தமிழினம் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாயின், முதலில் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை தேவை. அதே நேரம் தமிழுக்காகப் பாடுபடுகின்றவர்களும் தாங்கள் நிற்கக் கூடிய இடங்களை வெளிப்படையாகக் காட்ட வேண்டும். எவரும் எந்தப் பக்கத்திலும் நிற்கலாம். அவர்கள் தங்களுடைய பக்கம் இதுதான். அதற்கான காரணங்கள் இவைதான் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம்.

இதை விடுத்து உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது பெரும் பாவம். அதனை உரியவர்கள் தயவு செய்து கைவிட்டு விட வேண்டும். அன்பார்ந்த மக்களே! ஒரு புற்றில் இருக்கக் கூடிய பாம்புகளும் தனித்தனி இயல்புகள் கொண்டவையாக இருக்கலாம்.

ஆகையால் பாம்புகளைத் தனித்தனியாக ஆய்வு செய்யுங்கள். விஷப் பாம்புகள், வினைப் பாம்புகள் இருக்கலாம். ஏன்? நல்ல பாம்புகளும் வெங்கணாந்திப் பாம்புகளும் இருக்கலாம். பாம்பை இனங்காணும் திறன் தமிழ் மக்களுக்கு இருந்தால் மட்டுமே மீட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக