இன்றைய காலச் சூழலில் சிங்களப் பயங்கரவாத அரசானது, பல முனைகளிலும் எமது விடியலை நோக்கிய அனைத்துலகம் சார்ந்த செயற்பாடுகளை முடக்குவதில் தீவிரமாகச் செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் எமக்கிடையே பல குழப்பங்களை உருவாக்கி ஒற்றுமைகளைச் சீரழிப்பதிலும், இல்லாத பொல்லாத காரணங்களைச் சுமத்தி எமது உரிமைகளைப் பற்றிக் கதைப்பவர்களைச் சிறைப் பிடிப்பதுமாகப் பல கோணங்களில் சிங்களப் புலனாய்வாளர்களினால் கையாளப்பட்டு வருகின்றது. இதனூடாக மக்களிடையே ஒரு வித உளவியல் தாக்கத்தினை உண்டு பண்ணி எம்மைப் பலவீனப்படுத்துவதோடு, தனது போர்க்குற்ற மீறல்களிலிருந்து தப்பிக்கவும் முனைகின்றது சிங்கள அரசு.
எதற்குமே அஞ்சாத, மனிதாபிமான எமது செயற்பாட்டாளர்கள் தமது கடமைகளிலிருந்து பின்வாங்கியது கிடையாது. இருந்தும் மக்களாகிய எம்மை ஒரு பொறிக்குள் வீழ்த்தும் நோக்கில் பல திட்டமிட்ட செயற்பாடுகளில் சிங்களப் பேரினவாதம் சர்வதேசத்தை தன்பக்கமாகத் திசைதிருப்பி அவற்றின் உதவியுடன் எம்மை மீண்டும் ஒரு பாதாளத்துக்குள் வீழ்த்த முனைகின்றது. இதற்கு நாம் என்றுமே இடம் கொடுக்காது எமது இலக்கு நோக்கிய பாதையில் எத்தடைகளையும் உடைக்கும் மன உறுதியில் என்றுமே தயாராக இருந்து, எமது மறுக்கப்பட்ட உரிமைககளுக்காக எதிர்ப்பைக் காட்டுவதில் பின்வாங்கவும் போவதில்லை.
அந்த வகையில் அண்மையில் சுவிசில் மேற்கொள்ளப்பட்ட எமது மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களின் கைதென்பதும் ஒரு உளவியல்த்தாக்கத்தை உண்டு பண்ணி எமது மனவலிமையை உடைத்தெறியும் நோக்கத்துடன் “பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவினார்கள்” எனும் போர்வையை போர்த்து மனிதாபிமானமற்ற முறையில் கைதுசெய்யப்பட்டதென்பது எமது நேர்மையான போராட்டத்தை இன்னும் இனம் காணாமல் சிங்கள அரசுடன் சர்வதேசமும் உறுதுணை போகின்றதையே காட்டுகின்றது. இவ் மனிதாபிமானமற்ற கைதினால் தமிழ்மக்களாகிய நாங்கள் மிகவும் மனம் வருந்துகின்றோம். மேலும் இப்படிப்பட்ட கைதுகள் இனியும் தொடராமல் இருக்கும்படியும், செயற்பாடாளர்கள் மனம் சோர்ந்து விடாமல் எமது நியாயத்தை புரியவைத்தல் மிகவும் அவசியமானதொன்றாகும்.
ஓய்ந்து போயிருக்கும் எமது ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கிவிடுமென்ற அச்சத்தில் சிங்களப் பேரினவாதம் எம்மினத்தைக் கொண்டே அவர்கள் அறியாமல் பல சதித்திட்டங்களைச் செய்து வரும் இச்சூழமைவில் மிகவும் தெளிவுடன் இருத்தல் அவசியம். ஏனெனில் எமது உழைப்பிற்கான பலாபலன் என்றுமே கிடைத்திடாமல் போகப் போவதில்லை அப்படி கிடைக்காமல் போவற்கு நாம் சிங்களத்தின் சதிவலைக்குள் வீழ்ந்திடாது மிகவும் சாதுரியமாக நடந்து கொள்ளும் தருணம் இது. ஆணிவேர் அறுபடாமல் சாய்க்கப்பட்ட ஆலமரம் போன்று எமது விடுதலைப் போராட்டமும் இன்று எம்முன்னே வீழ்ந்து கிடக்கின்றது. இந்த வீழ்ச்சியை மீண்டும் தலைதூக்க விடாமல் எமது விடுதலைக்கு ஆணிவேராகத் திகளும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை முடக்கும் தீய நடவடிக்கையில் இன்று சிங்களதேசம் தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
எமக்கான சுதந்திரத்தைச் சிங்கள தேசம் என்றைக்குமே தரப்போவதில்லை என்பது நாம் அறியாத ஒன்றல்ல. எனவே ஏதோ ஒரு வழியில் நாம் போராடித்தான் எமக்கான உரிமைகளைப் பெறவேண்டும். எனவே எமது உரிமைகளுக்காக நாம் என்ன வழியில் போராடினாலும் சிங்களதேசம் அதைமுடக்கும் வேலைகளில் ஈடுபட்டே தீரும். இவற்றுக்கெல்லாம் நாம் அடிபணிவோமேயானால் இழக்கப்பட்ட மாவீரர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அவமதித்து மீண்டும் அடிமை வாழ்க்கையைத் தேடிச்சென்றுகொண்டே இருப்போம் என்பது திண்ணம். எனவே சிங்களத்தின் சதிவலைக்குள் வீழ்ந்திடாது மாவீரர்கள் விட்டுச் சென்ற பணியை, இலக்கு எட்டும் வரையில் அவர்கள் காட்டிய திசையில், இவ் மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் சுமந்தவாறு பயணிப்பதே சாலச் சிறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக