ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர தாகம் அகில உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இலங்கையில் யுத்தகாலங்களில் ஏற்பட்டிருந்த மாறுபட்ட அபிப்பிராயங்களும், கருத்துக்களும் தற்பொழுது மாறுதலடைந்து வருகிறது.
இதனிடையே சில சக்திகள் ஊடுருவி மக்களின் தாகத்தை வேறு திசைக்கு திருப்ப முயற்சிப்பதும் தெளிவாகிறது. ஒரு நாட்டுப்பழமொழி நினைவுக்கு வருகிறது. ‘கூத்தாடிக் கூத்தாடி கூட்டத்தைக் கலைக்கும் அண்ணாவிபோல‘ உள்ளுக்குள் நின்று நஞ்சை விதைப்பவர்கள் அதிகரித்துக்கொண்டு வருபவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
புலம்பெயர் நாடுகளில் தேசவிடுதலையை தளமாகக் கொண்டு உடல் வருத்தப்படாமல் ‘பிறர் உழைப்பில்‘ சுகம் கண்டகார்கள் ஏராளம். இப்பொழுது இலங்கையில் யுத்தமென்ற சந்தை மூடுப்பட்டதன் முன்னர் இந்த உழைப்பு பின்னடைவைக் கண்டிருந்தாலும், அந்த சுகமான உழைப்பு பற்றி சிந்திக்காமலும் இருக்க முடியாது. அதற்கான வழிகளில் இந்த சிம்பு, சீமான் போன்றவர்களை வரவழைப்பதும், இதைப் பொறுக்காத இதேபோன்ற ஏனைய சக்திகளும் அதற்கு மாறாக நிகழ்ச்சிகள் நடாத்துவதும் கலாசாரமாகிவிட்டது. இவைகளை வெளிக்கொண்டுவருபவர்களை துரோகிகளாகவும், எட்டப்பர்களாகவும் சோடிக்கப்படுவர்கள். ஏன்? தேசியத்தலைவர் பிரபாகரனே நேரில் வந்து மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், அதைக்கூட அரசாங்கத்தின் சதியில் வீழ்ந்துவிட்டாரென துரோகிப்பட்டம் கட்டுவதற்கு வெகுநேரம் போகாது. இது இப்படியிருக்க, அழைப்புக்கு வராமல் விட்ட சீமானும் சிம்புவும் கூட எட்டப்பனாக சோடிக்கப்பட்டால் அது ஒரு புதினமாக இருக்காது. இனியும் புலம்பெயர் மக்கள் மத்தியில் ‘இந்த புளித்துப்போன துரோகிப்பட்டம் என்ற பருப்பு வேகாது‘ என்பதும் மக்கள் தேசியத்தின் பால் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதும் சம்பத்தப்பட்டவர்களுக்கு புலனாகியிருக்கும்.
2010 ம் ஆண்டு மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கவிஞர் தாமரை தம்பதியினர் சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது அவர்களை இலங்கை அரசாங்கம் கொலை செய்ய முயற்சி செய்ததும் இதனால் சுவிஸ் அரசாங்கத்திற்கும் ஈழத்தமிழர்களும் ஒரு நெருக்கடியை உருவாக்க முயன்றதையும் நினைவு படுத்துவோம். இதனால், ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் இந்தியத் தமிழ் உணர்வாளர் எவரும் எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் சார்பாக மூச்சு விடக்கூடாதென குரல்வளையை நசுக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திலும், தேவையற்ற விதத்தில் இலங்கை அரசாங்கம் கபடத்தனமாக ஈழத்தமிழர்களை பகடைக்காயாக்கி வழங்கும் துரோகிப்பட்டத்திலும் அப்பாவி ஈழத்தமிழர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு சீமானையும் சிம்புவையும் பலிக்கடா ஆக்குவதற்கு ஈழத்தமிழர்கள் ஒரு துளியேனும், அறியாமல் கூட உடந்தையாக இருந்து விடக்கூடாது. இந்தப் பழி பெரும் அழிவை ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி விடும். இதையே சிங்களம் எதிர்பார்க்கின்றது. சிங்களத்திற்கு வெற்றி வாய்ப்பைக் கொடுப்பவர்கள் ஈழத்தமிழர்களாகவே இருந்தால் யுகங்கள் தோறும் ஒரு வரலாற்றுப்பழியாக இருக்கும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சீமானைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களுக்கான விடிவையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளையும் திடமாக ஏற்றுக்கொண்டவர் ஆவார். இதுவரைக்கும் சீமானைப்பற்றி, வழமையான இந்திய அரசியல் வாதிகளின் விலைபோகின்றதன்மையிலிருந்து வேறுபட்டு நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஈழத்தமிழர்களின் நல்ல காலத்தைப் பொறுத்து காலங்கள் சீமானை மாற்றாமல் இருக்க வேண்டுமென நம்புவோமாக.
இந்திய தமிழக தேர்தலைப் பொறுத்தவரையில் சீமானுக்காக அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமையக் காத்துக் கிடக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமைத்துவம் சீமான் கைக்கு வரும்பொழுது ஈழத்தமிழர்களின் நிலையிலும் பெரும் மாற்றமேற்பட வாய்ப்புண்டு. இதற்கு அனைத்து ஈழத்தமிழ்மக்களும் ஆதரவாக இருக்காவிடினும் உபத்திரவம் கொடுக்காது இருப்பவர்களாக இருக்கவேண்டும். சீமானை ஒரு தர்ம சங்கடத்துக்குள் ஆக்குவதால் அவரின் தமிழகத்து எதிரணிக்கு(கருணாநிதி-ஜெயலலிதா-காங்கிரஸ்)ம் ஈழத்தமிழர்களின் அராஜக வாதியான மகிந்தா கொம்பனிக்கும் பெரும் வாய்ப்பாகவும் அமையும். இந்த நிலையில் நீண்டகால நோக்கைக் கருத்திற் கொண்டு ஈழத்தமிழர்கள் மிக நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும். சில்லறைத் தனமான புலம்பெயர் நப்பாசை கொண்ட முதலைகளின் பிடியில் சீமான், சிம்பு உட்பட ஈழத்தமிழர்களின் விடிவை நோக்கிச் சிந்திக்கின்ற எவருமே சிக்கிவிடக்கூடாது.
தூர நோக்கோடு சிந்திக்கும் பொழுது சீமான், சிம்பு வருகை இரத்துச் செய்யப்பட்டது ஈழத்தமிழர்களின் சார்பில் விடிவு நோக்கிய ஒரு வெளிச்சத்தைக் காட்டுகிறது என்று கூறலாம்.
* புலம்பெயர் நாடுகளில் பிரிந்து நின்று கடை விரித்தவர்களுக்கு சீமான், சிம்புவின் வருகை இரத்து ஒரு பாடமாக அமையும். மேலும் இந்தப் பிரிவினையால் காட்டமாகக் கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து ‘பிறர் உழைப்பில் வாழுகின்ற இவர்கள்‘ திருந்த வேண்டும்.
* சீமான் தனது எதிர்காலத்தை கணக்கிட்டு, அதுவும் புலம்பெயர்நாடுகளில் ஈழ விடுதலையை நோக்கிய அமைப்புகள் ஒரு குடையின் கீழ் வரவேண்டுமென சீமான் நிபந்தனை விதித்ததும் ஈழத்தமிழர் சார்பில் வரவேற்கவேண்டிய கருத்தாகும்.
மிகப்பெரிய புத்திசாலியாகவும் சாதுரியம் மிக்கவராகவும் சீமான் தன் வருகையை இரத்துச் செய்ததிலிருந்து அவரைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக புயம்பெயர்நாட்டுத் தமிழர்கள் இனிவரும் காலத்தில் ஈழத்தில் உள்ளவர்களின் ‘பிறர் உழைப்பில் வாழுபவர்களின்‘ தலைமைத்துவத்தை ஏற்காது இந்தியத் தமிழ்நாட்டில் ஈழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களை(MGR போன்றவர்கள்) தலைமையாக ஏற்றுக்கொள்ளும் காலம் சீமானில் இருந்து ஆரம்பிக்கிறது எனலாம். அதுவும் சீமான், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் தம்மைக் காப்பாற்றிக் கொள்பவராக இருந்தால் மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக