சனி, 12 மார்ச், 2011

புலம் பெயர் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமதருமை தமிழ்ச் சகோதரர்களுக்கு முதற் கண் அன்பு வணக்கம். உங்களைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்வதில் எமக்கு எந்த வகையிலும் உடன்பாடு கிடையாது.புலம் பெயர் தமிழர்கள் என்ற பதம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் குறிப்பிடக் கூடியதேயன்றி அதனை எடுத்த எடுப்பில் கூறுவது பொருத்தமற்றதாகும்.

எதுவாயினும் எங்கள் துன்பதுயரங்கள் உலக அரங்கில் பகிரங்கமாவதற்கு உங்களை விட எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது.அதேசமயம் வன்னி யுத்தம் நடந்தபோது நீங்கள் ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தது முதல் பாதயாத் திரை, உண்ணாவிரதம், ஐ.நாவுக்குமுன் அமைதிப் போராட்டம் எனப் பலவழிகளிலும் உங்கள் உணர்ச்சிப் பிரவாகத்தைக் காட்டியிருந்தீர்கள். அது கண்டு எங்கள் இதயம் நெகிழ்ந்து கொண்டது. அத்தோடு உங்களின் உழைப்பும் உணர்வு கலந்த பாசமுமே யுத்தப் பேய்க்குள் அகப்பட்ட ஈழத்தமிழினத்தை தாங்கிப் பிடித்துத்தற்காத் துக் கொண்டது என்ற உண்மையை ஒருபோதும் மறந்துவிட முடியாது.

இருந்தும் உலகில் இடர்பட்ட மக்களை மீட்டெடுக்க, சர்வதேச நாடுகள் செய்த உதவியும், ஒத்துழைப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கசப்பான உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். அதேநேரம் தமிழினத்தை மீட்டெடுப்பதற்கு உலக வல்லாதிக்க நாடுகள் முன்வராமைக்கான காரணம் என்ன? என்ற ஆய்வு மேற்கொள்ளப் படுமாயின், எங்கள் அண்டை நாடாக இந்தியா இருந்தமை முக்கிய காரணங்களில் ஒன்று என்னும் மெய்ம்மை உணரப்படும். அதேவேளை உலக நாடுகளின் தலையீட் டை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உங்களைத் தவிர வேறு எவரிடமும் கிடையாது. ஈழத் தமிழர்கள், நல்லவர்கள், வல்லவர்கள், அவர்கள் நாடாளும் திறன் கொண்டவர்கள் என்ற நிஜத்தை உலக அரங்கில் ஏற்படுத்தும் பொறுப்பும் உங்களிடமேயிருக்கிறது.

ஆயினும் துரதிர்ஷ்ட வசமாக உங்களில் சிலர் வெளிநாடுகளில் நடந்துகொள்ளும் முறையானது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தவும் அதனைமையமாக வைத்து எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதற்கும் வாய்த்துவிடுகிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஈழத் தமிழினம் குறித்து அந்த நாட்டில் எதிர்மறையான முடிபே எடுக்கப் பட்டிருக்கும்.

எனவே புலம்பெயர்ந்த நீங்கள், தமிழினம் சார்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய தார்மிகப் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ளுங்கள். வெட்டுக் கொத்துக்களை உங்கள் ஊரோடு வேரறுத்துவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக