சனி, 26 மார்ச், 2011

தமிழக சட்டமன்றத் தேர்தல்: சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர் பாசம்



நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற சிங்கள அரச இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட ஈழத்தமிழர் மீதான படுமோசமான மனிதப்பேரவலத்திற்கு முக்கிய காரணம் இந்திய நடுவன் அரசு. இவ்வரசை ஆழும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியே ஈழத்தமிழரின் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். சிங்கள அரசிற்கு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள் என பல இராணுவ உதவிகளை நேரடியாகவே கொடுத்து தமிழினத்தை அழிக்க உதவி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவி இப்பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். இது ஒன்றும் ஈழத்தமிழர்களின் மீது கொண்ட பாசமல்ல.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகிறது என்பதனால் தமிழர்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு எப்படியேனும் கிடைக்க வேண்டும் என்கிற காரணம்தான் சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர்ப் பாசம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சிறிலங்காவில் சிங்கள அரசை தமிழர்களுக்கு எதிராக ஏவிவிட்டுப் பெரும் இன அழிப்பை நடாத்தியது சோனியா தலைமை தாங்கும் காங்கிரஸ் அரசுதான். இதனைப் பல தரப்பட்டவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். விடுதலைப்புலிகள் மீது அதீத விரோதம் கொண்டவர்தான் சோனியா. தனது கணவரை கொன்ற புலிகளை எப்படியேனும் அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் மந்திரியாக இருக்கும் புதுச்சேரியைச் சேர்ந்தவர் இக்கட்டுரையாளருக்கு கூறிய ஒரு வார்த்தை இன்றும் மனதில் உள்ளது. அவரின் கூற்றின்படி ராஜீவைக் கொன்ற புலிகளை அழிக்க நாக பாம்பு எப்படி பழி வாங்குமோ அதைப் போன்றேதான் இந்தியா செய்யும் என்று கூறினார். வாஜ்பாய் தலைமயிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக்காலத்திலேயேதான் இக்காங்கிரஸ் பிரமுகர் இப்படியாகக் கூறியிருந்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி பிரமுகரின் கருத்தே பல காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களிடம் இருக்கின்றது. இவர்களுக்கே இப்படியான கருத்திருக்குமென்றால், கணவரை பலிகொடுத்த சோனியாவுக்கு எப்படியாக இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்தால் புரிந்துகொள்ள முடியும். குற்றம் செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிற மனப்பாண்பு பலரிடத்தில் இல்லை. தலைவர்கள் என்றால் கடவுள்கள் என்று துதிபாடும் மக்களே இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள்.

1987-இல் ராஜீவ் அனுப்பிய இந்தியப் படைகள் ஏறத்தாள 10,000 ஈழத்தமிழரை கொன்றனர். பல்லாயிரம் பெண்களை மானபங்கப்படுத்தி கொடுமைப்படுத்தியது இந்தியப் படைகள். பல்லாயிரம் இளைஞர்களை கொடுமைப்படுத்தியது அமைதிகாக்கப் போவதாக சென்ற இந்தியப் படைகள். ஈழத்தமிழர்களின் உயிர்கள் மற்றும் அவர்களிற்கு நிகழ்ந்த அவலங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு துரும்பாகத் தெரிந்துள்ளது போலும். அதனால்தான் என்னவோ சோனியாவினால் சிங்கள கொலைவெறி ஆட்சியாளர்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்து 40,000 ஈழத்தமிழரை அழித்தும் லட்சக்கணக்கானவர்களை சிங்கள ஆட்சியாளர்களிடம் சரணடையும் நிலைக்கு உருவாக்கியது.

சராசரி இந்திய அரசியல்வாதியாகிவிட்ட சோனியா
இத்தாலியில் பிறந்து பெற்றோர்களினால் அன்ரோனியோ மைனோ என்கிற பெயர் சூட்டப்பட்ட சாதாரண பெண்மணி, ராஜீவை திருமணம் செய்து கொண்டதும் மாமியார் இந்திரா காந்தி சூட்டிய பெயரே சோனியா காந்தி. வெள்ளையினத்தினரிடத்தில் பரவலாக இருக்கும் பரந்த மனப்பாங்கு கடுகளவேனும் சோனியாவிடம் இல்லை. இந்திய மக்களிடம் புரையோடிப்போயிருக்கும் பழிக்குப் பழி வாங்கும் குணாதிசயங்கள் சோனியாவையும் அதிகமாக உட்கொண்டுவிட்டது.

அரசியல் காரணங்களுக்கு எதனையும் விட்டுக்கொடுத்து எப்படியேனும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடினால் போதும் என்கிற இந்திய அரசியல்வாதிகளிடத்தில் இருக்கும் அதே குணம் சோனியாவிடத்திலும் வந்துவிட்டது போலும். மார்ச் 17-இல் இடம்பெற்ற 14-ஆவது காமன்வெல்த்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற சோனியா லண்டன் சென்றார். அவரின் சிறப்புரைக்கு முன்னதாக அவரிடம் சில கேள்விகளை உலகத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் கேட்கப்பட்டது. சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா? எனக் கேட்டபோது அது குறித்து கருத்து வெளியிட முடியாது என மறுத்தார். எந்த ஒரு இடத்திலும் தான் தமிழர்கள் பக்கம்தான் இருப்பேன் என்று கூறவில்லை என்கின்றனர் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட சில தமிழ் அன்பர்கள். இருப்பினும், உலகத் தமிழர் பேரவையோ சோனியா அப்படிக் கூறியதாக அடித்துக் கூறுகிறது.

ஈழத்தில் சிங்களப் படையினர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் குறித்து சோனியாவிடம் வினாவப்பட்டபோது சிறிலங்காவில் அவ்வாறானதொரு நிலை நடந்திருப்பின் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என குறிப்பிட்டார். வார்த்தைப் பிரயோகங்களைச் மிகவும் துல்லியமாகப் பாவித்த சோனியா காந்தி எல்லா இடங்களிலும், அப்படி நடந்தால், இப்படி நடந்தால் அதனைத் தான் கண்டிக்கிறேன் என்று கூறித் தப்பித்தார். அவ்வளவுதான். மற்றும்படி அவர் வேறு எந்த ஒரு இடத்திலும் தமிழர்கள் பக்கம் தான் இருப்பேன் என்று தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர் சிலர்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை தாம் சந்தித்தது மிகவும் எதிர்பாராத ஒரு விடயம், ஆனால் தாம் தமிழ் மக்களின் நிலையை அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “இந்த சந்திப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. பார்வையாளர்களாகச் சென்ற நாம், கேள்வி நேரத்தில் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நிலை, அங்கு மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் அவருக்கு விளக்கியிருந்தோம். போர்க்குற்ற காணொளியை தான் நேரிடையாக பார்த்ததாக தெரிவித்துள்ள சோனியா காந்தி தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றெடுக்க இந்தியா உதவும் எனவும், அவர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா உதவும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியா தமிழ் மக்களுடன்தான் நிற்கும் என அவர் பல தடவைகள் தெரிவித்தார்."

சோனியா காந்தி சராசரி இந்திய அரசியல்வாதியைப்போலவேதான் செயற்படுகிறார் என்பது இதனூடாகத் தெரிகிறது. ஒன்றைக் கூறுவது பின்னர் பிறர் மூலமாக அதனை மறுதளிப்பது சர்வ சாதாரணமாக இந்தியாவில் இடம்பெறுவதே. யார் சொல்வது உண்மை என்பது காலப்போக்கில் நிச்சயம் தெரியவரும். அப்போது பொய் சொல்லுபவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும். ஆனால், ஓன்று மட்டும் நிச்சயம் என்னவெனில் தமிழகத்தில் தேர்தல் இடம்பெற இன்னும் மூன்று கிழமைகளுக்கும் குறைவாக இருப்பதனால் சோனியா தமிழர்களின் வாக்கைப் பெற்று காங்கிரஸ் கட்சியின் அணியினர் வென்றுவிட வேண்டுமென்கிற போக்கில் எதையேனும் சொல்லியிருப்பார் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

காங்கிரஸ் கட்சியின் தொடர்பை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ்
நீலிக்கண்ணீர் வடிக்கும் சோனியா எதனைச் சொன்னாலும் பொய் உண்மையாகாது. சிறிலங்கா அரசு வெறும் கருவியே. அதனை ஏவிவிட்டு ஈழத்தமிழரின் அழிவுக்கு காரணமாக இருந்தது இந்தியாவே என்று அத்தாட்சிகளுடன் உறுதிப்படுத்துகிறது விக்கி லீக்ஸ். ஈழத்தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஊடாக பலர் முயற்சித்தபோது அதற்கு தடை போட்ட இந்திய காங்கிரசினதும் சோனியாவினதும் கூட்டாளி நாராயணன்தான் என்பது தெரியவந்துள்ளது. நாராயணனை ஆட்டிவித்ததே சோனியாதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவருக்கு காங்கிரஸ் கட்சியினால் பல தரப்பட்ட வசதிகள் செய்து கொடுக்கபட்டுள்ளதுடன், பல முக்கிய பொறுப்புக்களை இவருக்கு காங்கிரஸ் தலைமயிலான அரசே கொடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஒரு தீவிர விடுதலைப்புலிகள் இயக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்திருந்ததாக விக்கி லீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி நாராயணன் மீண்டும் மீண்டும் தெரிவித்திருந்த கருத்துக்களின் அடிப்படையில் சென்னையிலிருந்த அமெரிக்கத் தூதரக கொன்ஸ{லேட் ஜெனரலும், அதிகாரிகளும் இந்த முடிவுக்கு வந்திருந்தனர் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தில் இந்திய சமாதானப் படை நிலைகொண்டிருந்த காலத்திலும், வன்னி யுத்தத்தின் போதும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவரே நாராயணன் ஆவார்.
ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பைக் கையாண்டவர்கள் தமிழகத்திற்கு அருகில் இருக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்த நாராயணன் மற்றும் தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இந்தக் காலப்பகுதியில் இருவருக்கும் மேலதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்திய புலனாய்வுத்துறையில் 40 வருடங்களுக்கு மேலாக கடமை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போர் நின்றுவிடாத வகையில், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து சிறிலங்கா அரசை இந்தியாதான் காப்பாற்றியது என வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விக்கி லீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலமாக தெரியவந்துள்ளது என 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கு பல தடவை குரல் கொடுத்த இந்திய அரசு, அதுகுறித்து தனது கவலையையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தது. அதேவேளையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்கவே இல்லை என அமெரிக்க தூதரக கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடியும் தருவாயில், ஈழத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச நாடுகளுடனும், அமைப்புகளுடனும் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டாலும், சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை மழுங்கடிக்கும் முயற்சியில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, காங்கிரஸ் தலைமயிலான இந்திய நடுவன் அரசின் பொய் முகத்திரையை விக்கி லீக்ஸ் கிழித்தெறிந்துள்ளது. இதனை மறைத்து தமிழ்நாட்டு மக்களை மென்மேலும் முட்டாள்களாக்கி தி.மு.க. தலைமயிலான கூட்டணியை எப்படியேனும் பதவிக்கு கொண்டுவருவதனூடாக, அடுத்துவர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தலைமயிலான ஆட்சியே நியூ டெல்லியிலும் இடம்பெற வேண்டும் என்கிற நட்பாசையுடன் களம் இறங்கியிருக்கிறார் சோனியா. இவைகளே சோனியாவின் ஈழத்தமிழர் மீதான திடீர்ப் பாசத்திற்கு காரணம். தமிழர்கள் விழிப்பாக இருந்தால் யாராலும் அவர்களை ஏமாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக