புதன், 27 ஏப்ரல், 2011

கருணாநிதி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்- விஜய்காந்த்

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு துணை போய்விட்டு, இன்றும் நீலிக் கண்ணீர் வடிப்பது தமிழர்களை இன்னும் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா?’ என்று கருணாநிதியைக் கண்டித்து தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் அறிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
‘இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனவெறி அரசு இத்தகைய தமிழினப் படுகொலை நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். ஏற்கனவே சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு காப்பாற்றி உள்ளது.
எனவே, மத்திய அரசின் ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.கவிற்கும் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்.
தற்பொழுது ஐ.நா. மன்றமே சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபட்சயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக