ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

யாழ்-இந்துக்கல்லூரி ஆசிரியை கொலை!

யாழ்ப்பாணத்தின் சில்லாலை பிரதேசம் சாந்தைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான செல்வராஜா அனுஷா என்ற ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் வீட்டில் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இளவாலைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
இவர் யாழ்.இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை ஆவார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

உடலில் நகக் கீறல் காயங்கள் காணப்படும் அதேசமயம், வேறு சில தடயங்களும் இருப்பதால், இவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வீட்டிலுள்ள ஏனையோர் கோயிலுக்குச் சென்றுவிட்டனர். மரணமான ஆசிரியை பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அதன் பின்னரே அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. கோயிலுக்குச் சென்றிருந்த இவரது குடும்பத்தவர்கள் திரும்பி வந்துள்ளனர். அப்போது யுவதி வீட்டில் இருக்கிறார் என்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் இருக்கவில்லை.
அதையடுத்து, வீட்டார் உள்ளே சென்று பார்த்தபோது கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் அவரின் சடலம் காணப்பட்டது. முழந்தாள் நிலத்தில் பட்டும் படாமலும் மடிந்த நிலையில் சடலம் கிடந்தது. கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுக்கமாக அன்றி இளகிய நிலையில் காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
நேற்றையதினம் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் பதில் நீதிவான் சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறும் உடற் கூற்றுப் பரிசோதனை நடத்தி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தினார்.
உடலில் கீறல் காயங்கள் காணப்படுவதாலும் வேறு சில தடயங்கள் இருப்பதாலும் இந்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று விசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்பட்டது. மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக