கிரேக்க நாட்டு தத்துவஞானியே சோக்கிரட்டீஸ்! உன் வரவுக்காக ஈழத்தமிழ் இனம் காத்திருக்கின்றது.
எங்களின் காத்திருப்பு உன் அறிவுக்கு பொன்னாடை போர்க்கவல்ல, உனது காலத்து கிரேக்க சமூகம் போல ஈழத்தமிழ் இனம் இப்போது உள்ளது. அது அறியாமைக்காலம். அதனால் நீ அறிவுரைத்தாய். ஆனால் நாமோ அப்படியல்ல.
எங்களின் காத்திருப்பு உன் அறிவுக்கு பொன்னாடை போர்க்கவல்ல, உனது காலத்து கிரேக்க சமூகம் போல ஈழத்தமிழ் இனம் இப்போது உள்ளது. அது அறியாமைக்காலம். அதனால் நீ அறிவுரைத்தாய். ஆனால் நாமோ அப்படியல்ல.
அறிவிலிருந்து அறியாமைக்கு வந்தவர்கள். செல்வத்திலிருந்து வறுமைக்கு வந்தோம். உயர் கலாசார பண்பாட்டு விழுமியத்திலிருந்து சாக்கடை கலாசாரக் குழியில் விழுந்தோம் - விழுத்தப்பட்டோம்.
தாமே அறிவுரைப்பதாக நினைக்கும் ஒரு அறியாமை அரசியல் தலைமையில் சிக்குண்டு சின்னாபின்னப்படுகின்றோம். ஆகையால் நீ வரவேண்டும். வந்து...
ஓ! எனதருமைத் தமிழ் இளைஞர்களே! நீங்கள் என்னதான் செய்கிறீர்கள். உங்களின் எதிர்காலம் பற்றி ஏதேனும் சிந்தித்தீர்களா? உங்களைச் சுற்றி என்ன நடைபெறுகின்றது என்று நீங்கள் எப்போதாவது ஆராய்ந்ததுண்டா?
இதோ நான் சோக்கிரட்டீஸ் அழைக்கின்றேன். ஒரு கணம் உங்கள் எதிர்காலம் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். பாழடைந்த குடிமனைகளும், சிதைந்துபோன உங்கள் அடையாளச் சின்னங்களும் அதோ தெரிகிறது.
கூடவே கடற்கரையோரங்களில் ஒரு முழத் துண்டுடன் கையில் பியர் போத்தலோடு இளைஞர்களின் ஆடல்பாடல் நடக்கிறது. தொழில் இல்லாத இளம் கூட்டம் சந்திகளில் குந்தியிருந்து சல்லாபம் விடுகின்றன.
அந்த இளைஞர்கள் குந்தியிருக்கும் சந்திச் சுவர்களின் அடிவாரத்தில் மங்கிக்கிடக்கும் ஒரு வாசகம் ‘ஈழத்தமிழ் இளைஞர்கள்தான் உலகத் தமிழ் இனத்திற்கு விடிவைப் பெற்றுத் தரும் மறவர்கள். புறநானூறு கண்ட வீரர்களும் அவர்கள்தான்’
கி.ஆ.பொ.விசுவநாதம் கூறிய அந்த வாசகம் தெரிகிறது. ஓ! இன்னும் சில நாட்களில் அவை சிதைந்து விடும். பாவம் விசுவநாதம். முதுமையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை இப்படியாகும் என்று யார்தான் நினைத்தார்கள்.
நல்லகாலம் இக்கொடுந்துயரைக் காணாமல் விசுவநாதப் பெரியோன் மறைந்து விட்டார். இல்லையெனில் உங்கள் நிலைமையே அவரின் மரணத்துக்கான காரணம் என மருத்துவர்கள் குறிப்பு எழுதியிருப்பர்.
தமிழ் இளைஞர்களே! கலாசாரச் சீரழிவுகள் ஒருபுறம். உங்கள் எதிர்காலத்தை சீரழிக்க பாபுல், நாண்ஸ், பாண் பராக் என்னும் போதைப் பொருட்கள் மறுபுறம். என்னதான் செய்யப் போகிறீர்கள் விழித்தெழுங்கள். கலாசாரச் சீரழிவை உடைத்தெறியுங்கள். அது உங்களால்தான் முடியும். போதைப்பொருளை விற்பனை செய்வோரை அடித்து நொருக்குங்கள். அதுவும் உங்களால் மட்டுமே முடியக்கூடிய காரியம்.
கிரேக்க நாகரிகம் போல் உங்கள் தமிழ் நாகரிகமும் உயர்ந்தது.அதற்கு முடிசூட்டுங்கள். அது உங்களால் ஆகும். நம்புங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக